Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM

ஊடகத்தின் தரம் உயர்த்த வழிகள் என்ன?- சென்னை கருத்தரங்கில் என். ராம் பேச்சு

ஊடகம், பொது நலன் மற்றும் ஒழுங்கு நெறிகள் குறித்த பிரச்சினைகள் குறித்த கருத்தரங்கம் சென்னை யில் நடந்தது. இதில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

ஊடகம், பொது நலன் மற்றும் ஒழுங்கு நெறிகள் குறித்த பிரச்சினைகள்: இந்திய-பிரித்தானியப் பார்வைகள் என்னும் தலைப்பில் சென்னையில் பிப்ரவரி 3, 4 தேதிகளில் கருத் தரங்கம் நடைபெற்றது. இதில் சுதந்திரத்துக்கும் பொறுப்பு ணர்வுக்குமான இணக்கத்தை ஏற்படுத்துதல், ஊடகத்தில் ஒழுங்கு நெறிகள், மேற்கு மற்றும் கிழக்கில் ஊடகவியல் அறங்கள், ஊடகமும் இண்டெர்நெட்டும், ஊடகத்தின் எதிர்காலம் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகள் நடந்தன.

மீடியா டெவெலப்மெண்ட் பவுண்டேஷன், பேனோஸ் சவுத் ஆசியா மற்றும் பிரிட்டிஷ் துணை தூதரகம் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், “பொறுப்புணர்வு என்பது ஊடகத் துறைக்குள்ளிருந்தே வர வேண்டும்” என்றார்.

யாருக்கான சுதந்திரம், யாரிடம் பொறுப்புணர்வு போன்ற கேள்விகளுடன் தனது உரையை துவக்கிய தி இந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ரவி, “இந்திய ஊடகங்கள் சமூகப் பிரச்சினைகளை மேலும் நுண்ணுணர்வுடன் அணுகுவது, நியாயமாக நடந்து கொள்வது, துல்லியமான செய்திகளைத் தருவது போன்றவற்றைக் கடை பிடிப்பது முக்கியம்” என்றார்.

அதேபோல், “ஊடக நிறுவனங்கள் ஆசிரியர் குழாமிற்கான நெறிகளை வகுப்பதன் மூலமும், சுயமாக நெறிப்படுத்தும் ஏற்பாடு செய்வதன் மூலமும் ஊடகத்தின் தரம் உயரவும் மக்களின் பார்வையில் மதிப்பு உயரவும் சாத்தியம் உண்டென்று கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் என்.ராம் கூறினார்.

ஊடகத் துறையின் ஒழுங்கு நெறிகள் எதுவும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்பதை ஊடகக் கல்விக்கான ராயிட்டர்ஸ் இன்ஸ்டிட்யூடின் இயக்குநர் ஜான் லாயட் வலியுறுத்தினார்.

“ஊடகங்களுக்கான ஒழுங்கு நெறிகள் எப்போதும் எதிர்ப்பிற்குரிய விஷயமாக இருந்திருக்கிறது” என்றார் பேனோஸ் சவுத் ஆசியாவின் செயல் இயக்குநரும் தி இந்து ஆங்கில நாளிதழின் ரீடர்ஸ் எடிட்டருமான ஏ.எஸ்.பன்னீர் செல்வம்.

இரண்டாம் நாளில் உலகளாவிய ஊடக அரங்கில் இணைய ஊடகம் செலுத்தி வரும் தாக்கத்தின் பல்வேறு கூறுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அச்சு ஊடகத்தைக் கிட்டத்தட்டக் காலிசெய்துவிடும் நிலை வெளிநாடுகளில் இருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டினாலும் இந்தியாவில் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

பின்னர் ஊடகங்களின் எதிர்கால நிலை என்னும் தலைப்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அச்சு ஊடகங்களின் விளம்பர வருமானம் மெல்ல மெல்லக் குறைந்து வருவதையும் கூகிள் போன்ற இணையதளங்களின் வருமானம் அதிகரித்து வருவதையும் ஃபினான்ஷியல் டைம்ஸின் மேனேஜிங் எடிட்டர் ஜேம்ஸ் லமாண்ட் சுட்டிக்காட் டினார். இணைய ஊடகங்களின் வெற்றிக்குத் தொழில்நுட்பம், கைபேசிகளில் அவற்றைப் பெறக்கூடிய சாத்தியம் ஆகியவை காரணங்களாக இருந்தாலும் வாசகர்களுடனான உயிரோட்டமுள்ள பரிமாற்றம்தான் முக்கியக் காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

அச்சு ஊடகங்களில் வாசகர்களுடனான உரையாடலை, வாசகப் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம் அதன் தேக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியும் என்னும் நம்பிக்கையைப் பலரும் தெரிவித்தார்கள்.

கருத்தரங்கில் ஊடகவியலா ளர்கள் மாலன், கிருஷ்ண பிரசாத், சுதர்சன், ஓம் தன்வி, பகவான் சிங், பிரிட்டிஷ் துணை தூதரகத்தின் செய்தித்துறை இயக்குநர் மார்க்கஸ் வின்ஸ்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x