Published : 23 Mar 2017 09:51 PM
Last Updated : 23 Mar 2017 09:51 PM

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோக மித்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று கால மானார். அவருக்கு வயது 86.

பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன், சென்னை வேளச்சேரியில் வசித்துவந்தார். கடந்த சில நாட் களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு 8 மணி அளவில் வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவ ருக்கு வயது 86. அசோகமித்திர னுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, 3 மகன்கள் உள்ளனர். மகன் டி.ராமகிருஷ்ணன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். வேளச்சேரி சாஸ்திரி தெரு பாபாஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள், நண்பர்களின் அஞ்சலிக்குப் பிறகு, பெசன்ட் நகர் மயானத்தில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.

ஆந்திர மாநிலம் செகந்திரா பாத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர் அசோகமித்திரன். இயற்பெயர் ஜ.தியாகராஜன். தந்தை ரயில்வே குமாஸ்தா. 1952-ல் தந்தையின் மரணத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறினார். பின்னர், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார். 1956-களில் எழுதத் தொடங்கினார். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய அனுபவங்கள் அடிப்படையில் ‘மை இயர்ஸ் வித் பாஸ்’ என்ற ஆங்கில நூலை எழுதினார்.

1966 முதல் முழு நேர எழுத் தாளராக மாறினார். அதைத் தொடர்ந்து ‘அசோகமித்திரன்’ என்ற புனைப்பெயரில் சிறுகதை கள், நாவல்கள், கட்டுரைகள் எழுதினார். ‘டெக்கான் ஹெரால்டு’, ‘இல்லஸ்ரேட்டட் வீக்லி’ உள்ளிட்ட பத்திரிகை களிலும் எழுதினார். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கணையாழியில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். 8 நாவல்கள், 250 சிறுகதைகள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள், பத்தி எழுத்து எனப் படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தவர் அசோகமித்திரன்.

‘ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்’, ‘தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்’, ‘ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்’ உள்ளிட்ட இவரது ஆங்கில நூல்கள் மிகவும் பிரபலம். ஆங்கில நாளிதழ்களி லும் தொடர்ந்து எழுதி வந்தார். ‘கரைந்த நிழல்கள்’, ‘நாடகத்தின் முடிவு’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’, ‘பிரயாணம்’, ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘மானசரோவர்’, ‘ஒற்றன்’, ‘ஆகாசத் தாமரை’, ‘விடுதலை’ முதலான இவரது பல படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. ‘தி இந்து’ தமிழில் வெளிவந்த இவரது ‘மவுனத்தின் புன்னகை’ தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

‘அப்பாவின் சிநேகிதர்’ தொகுப்புக்காக 1996-ல் சாகித்ய அகாடமி விருது, டால்மியா மத நல்லிணக்க விருது, தேவன் விருது, தமிழக அரசின் திரு.வி.க. விருது, சாரல், இலக்கியச் சிந்தனை, அக் ஷரா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

அசோகமித்திரனின் மறை வுக்கு இலக்கியவாதிகள், எழுத் தாளர்கள் இரங்கல் தெரிவித் துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளி யிட்ட இரங்கல் குறிப்பில், ‘நான் வாசித்த, நேசித்த, சந்தித்த நல்ல எழுத்தாளர் அசோகமித்திரன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x