Published : 21 Feb 2014 12:06 PM
Last Updated : 21 Feb 2014 12:06 PM

3 தமிழர்களைத் தூக்கிலிட துடிப்பதா?- மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை திரும்பப் பெற்று, வஞ்சம் தீர்க்கும் நோக்குடன் செயல்படுவதை விட்டுவிட்டு, 7 தமிழர்களும் விடுதலையாவதற்கு மத்திய அரசு வழி வகுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்ததையடுத்து அவர்களும், ஏற்கனவே தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறையில் வாடும் நளினி உள்ளிட்ட நால்வரும் விடுதலை ஆவதற்கான சூழல் உருவானது.

ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த 2 மனுக்களால் அவர்கள் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட மூவரும் ஆயுள் தண்டனையாக கருதப்படும் 14 ஆண்டு சிறைவாசத்தை ஏற்கனவே அனுபவித்துவிட்ட நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432, 433(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் விடுதலை செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அரசுகள் ஆய்வு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றமே அதன் தீர்ப்பில் கூறியிருக்கிறது.

அதன்படி தண்டனைக் குறைப்புக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கிய நிலையில், மத்திய அரசு அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தை அணுகி, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தடை பெற்றுள்ளது. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு காட்டிய அசாத்திய வேகம் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக நான் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்து பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா 138 முறை கடிதம் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்றின் மீது கூட பிரதமரும், மத்திய அரசும் நடவடிக்கை எடுத்ததில்லை.

ஆனால், 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதம் கிடைப்பதற்கு முன்பாகவே மத்திய அரசு அதிரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி தடை பெற்றிருக்கிறது. இதிலிருந்தே தமிழர்கள் விஷயத்தில் மத்திய அரசு எந்த அளவுக்கு பழி வாங்கும் உணர்வுடனும், வஞ்சம் தீர்க்கும் வேகத்துடனும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

7 தமிழர்களின் விடுதலைக்கு தடை வாங்கிய சில மணி நேரங்களிலேயே பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி இன்னொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது.

இதன்மூலம் அவர்கள் மூவரையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

சொந்தக் குடிமகனையே தூக்கிலிட வேண்டும் என்று துடிக்கும் ஒரே நாகரீக நாடு இந்தியாவாகத் தான் இருக்கும். இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் ஒருபுறம் கூறுகிறார்; தூக்கு தண்டனையை நான் ஆதரிக்கவில்லை என ராகுல் காந்தி இன்னொருபுறம் தெரிவிக்கிறார்; ஆனால், ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக கொண்ட காங்கிரஸ் அரசு மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்துகிறது எனும் போது மத்திய ஆட்சியாளர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருமே இந்த வழக்கில் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப் பட்டவர்கள். தூக்குத் தண்டனையிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டது நிம்மதி அளிப்பதாக இவ்வழக்கை புலனாய்வு செய்த சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படவில்லை. மரண தண்டனையை எதிர்நோக்கிய மன உளைச்சலுடன் கூடிய 16 ஆண்டு தனிமைச் சிறை உள்ளிட்ட 23 ஆண்டுகால சிறை தண்டனையை அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள். இந்தக் கொடிய தண்டனைக்குப் பிறகும் அவர்களை வாழ விடக் கூடாது; தூக்கிலிட்டே தீர வேண்டும் என்று எவரேனும் வலியுறுத்தினால், அவர்கள் மனித நேயம் கொண்டவர்களாக இருக்க முடியாது; மாறாக நவீன சர்வாதிகாரிகளாகத் தான் இருந்தாக வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தில் வஞ்சம் தீர்க்கும் நோக்குடன் செயல்படுவதை விட்டுவிட்டு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை திரும்பப் பெற்று, 7 தமிழர்களும் விடுதலையாவதற்கு மத்திய அரசு வழி வகுக்க வேண்டும்.

தமிழக அரசும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432, 433(ஏ) ஆகிய பிரிவுகளின்படி 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்திய அரசியல் சாசனத்தின் 161&ஆவது பிரிவைப் பயன்படுத்தவும் தமிழக அரசு தயங்கக் கூடாது". இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x