Published : 19 Oct 2013 01:17 PM
Last Updated : 19 Oct 2013 01:17 PM

சீருடை பணியாளர்களுக்கு சீரான சலுகை - முதல்வர் உத்தரவு

நாட்டு மக்களுக்கு நன்மைப் பயக்கும் பணிகளையே ஆற்றும், அனைத்து சீருடை பணியாளர்களுக்கும் ஒரே சீரான சலுகை அளிக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை மற்றும் வனத்துறையைச் சார்ந்த சீருடைப் பணியாளர்கள் அனைவரும் நாட்டு மக்களுக்கு நன்மைப் பயக்கும் பணிகளையே ஆற்றுகின்றனர்.

எனவே சீருடைப் பணியாளர்களிடையே எந்தவிதமான பாகுபாடும் இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து சீருடை பணியாளர்களுக்கும் ஒரே சீரான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, காவல்துறையில் காவலருக்கு சீருடைக்காக 2,650 ரூபாய் செலவிடப்படுவதைப் போல, வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளருக்கும் சீருடைக்காக ஆண்டொன்றுக்கு 2,650 ரூபாயும், காவல்துறையில் உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளருக்கு சீருடைக்காக 2,800 ரூபாய் செலவிடப்படுவதைப் போன்று வனத்துறையில் வனவர் மற்றும் வனச்சரக அலுவலருக்கு ஆண்டொன்றுக்கு 2,800 ரூபாயும் இந்த நிதியாண்டிலிருந்து வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று போக்குவரத்து காவலருக்கு உயர்த்தப்பட்ட சலவைப்படியான 350 ரூபாயை, வனத்துறை சீருடைப் பணியாளர்களுக்கும் மாதந்தோறும் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை காவலர் முதல் ஆய்வாளர் நிலை வரை உள்ளோர்க்கு மாதந்தோறும் வழங்கப்படும் இடர்படியான 400 ரூபாயை வனக்காவலர் முதல் வனச்சரக அலுவலர் நிலை வரை உள்ள அலுவலர்களுக்கு வழங்குவதற்கும், துணைக் கண்காணிப்பாளர் முதல் கூடுதல் கண்காணிப்பாளர் வரை மாதந்தோறும் வழங்கப்படும் இடர்படி அளவான 450 ரூபாயை உதவி வனப் பாதுகாவலர் மற்றும் மாநில துணை வனப்பாதுக்காவலர் நிலை வரை உள்ள அலுவலர்களுக்கு வழங்குவதற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வனத்துறை சீருடை பணியாளர்களுக்கு டார்ச்லைட், மழைக்கோட்டு மற்றும் தீத்தடுப்பு வேலைகளுக்கான சிறப்புக் காலணி ஆகியவற்றை வழங்குவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இச்சலுகைகளை வனத்துறை பணியாளர்களுக்கு வழங்குவதன் மூலம் அரசுக்கு 4 கோடியே 53 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். இதன் மூலம் 5,600 வனத்துறை சீருடை பணியாளர்கள் பயன் பெறுவர்.

இதைத் தவிர, காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சீருடை பணியாளர்களுக்கு காவல்துறை அங்காடிகளில் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று, இந்த அங்காடிகளில் வனத்துறையில் உள்ள சீருடைப் பணியாளர்கள், ஓய்வுப் பெற்ற வனத்துறை சீருடை பணியாளர்கள் மற்றும் மறைந்த வனத்துறை சீருடைப் பணியாளர்களின் குடும்பத்தினரும் மானிய விலையில் பொருட்களைப் பெறுவதற்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 8,730 வனத்துறை சீருடைப் பணியாளர்கள் பயன் பெறுவர்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் வனத்துறையைச் சார்ந்த பணியாளர்களுக்கு ஏனைய சீருடைப் பணியாளர்களைப் போல அனைத்து சலுகைகளும் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x