Published : 29 Jan 2017 12:04 PM
Last Updated : 29 Jan 2017 12:04 PM

பேனர்கள் குறையட்டும்.. இலட்சியக் கொடிகள் உயரட்டும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஆடம்பர விளம்பரங்களைக் கைவிட்டு, இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் போது பொதுமக்களின் பேராதரவு பெருகும். புதிய இளைஞர்கள் நம்முடன் அணிவகுத்து வருவார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் உரிமையுடன் கூடிய அன்புக் கோரிக்கை மடல்.

கழகத்தைக் கட்டிக்காக்கும் தொண்டர்களை கடிதம் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அடிக்கடி சந்தித்தாலும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு அமையும் போது ஏற்படும் உணர்வுக்கு அளவே கிடையாது. உங்கள் முகம் பார்க்கும் அந்தப் பொழுதினில் ஒரு கோடி சூரியன் உதித்தெழுந்தது போன்ற எண்ணம் ஏற்படும். அதனால் தான், தலைவர் கலைஞர் அவர்களின் வழியிலும், வழிகாட்டுதலிலும் அடிக்கடி ஆர்வத்துடன் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொண்டு உங்கள் அன்புமுகம் கண்டு ஆனந்தம் அடைந்து வருகிறேன்.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்திற்காக அண்மையில் கோவை மாநகருக்கு நான் சென்ற போது வழிநெடுக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுபோலவே வெளியூர் நிகழ்வுகள் பலவற்றிலும் காண்கிறேன்.

உங்களில் ஒருவனாக நான் உங்களை சந்திக்க வரும் போது, அன்பின் மிகுதியால் வழிதோறும் நீங்கள் வைக்கின்ற வரவேற்பு பேனர்களையும், அதில் உங்களின் உள்ளத்து வெளிப்பாடுகளையும் காண்கிறேன். தலைமை மீது நீங்கள் கொண்டுள்ள உறுதியான பிடிப்பும், கழகத்தின் தொண்டன் என்கிற உங்களின் பெருமிதமும் அந்த பேனர்களில் இடம்பெறும் படங்களிலும், வாக்கியங்களிலும் அறியமுடிகிறது. என் படத்துடன் உங்கள் படங்களையும் ஒன்றாக இடம்பெறச் செய்து நமது இயக்கக் குடும்பத்தில் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டும் உங்களின் எண்ணத்தை மதிக்கிறேன். அதே நேரத்தில், இத்தகைய ஆடம்பர வெளிப்பாடுகள் அதிகமாகி முகம் சுளிக்கும் அளவுக்கு அமைந்து விடக் கூடாது என்று எச்சரிக்க வேண்டிய பொறுப்பும் உரிமையும் எனக்கு இருப்பதாகக் கருதுவதால் இந்த அன்பு வேண்டுகோளை விடுக்கிறேன். சாலையின் இருபுறத்திலும், சில நேரங்களில் சாலையின் நடுவிலும் பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பது என் கட்டளையல்ல, உரிமை கலந்த அன்புக் கோரிக்கை.

என்ன நிகழ்ச்சி நடைபெறுகிறது எங்கே நடைபெறுகிறது என்பதை கழகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஓரிரு பேனர்கள் மட்டும் அமைப்பதில் தவறில்லை. அந்தப் பேனர்களும் கூட பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி அமைக்க வேண்டும். வழிநெடுக பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சி பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக வைக்கப்படும் ஓரிரு பேனர்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரின் படங்கள் மட்டும் இடம் பெற வேண்டும். கழகத்தின் இலட்சியங்களை விளக்கும் அவர்களின் பொன்மொழிகள் இடம்பெற வேண்டும். நிகழ்ச்சி பற்றிய விவரங்களுடன், தேதியைக் குறிப்பிடும் போது நான் முன்பே விடுத்த வேண்டுகோள்படி, வழக்கமான ஆங்கிலத் தேதியுடன் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டப்பூர்வமாக்கிய திருவள்ளுவராண்டு- தமிழ் மாதம்-தேதி ஆகியவற்றையும் மறவாமல் குறிப்பிட வேண்டுகிறேன்.

கழகத்தினர் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என உணர்த்தும் வகையில், நிகழ்ச்சி அறிவிப்பு பேனர்கள் மட்டுமே போதுமானது. ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பேனர்கள் வைப்பதால் தான் அருமையான விழாக்கள் கூட ஆடம்பரமானதாக ஆகிவிடுகின்றன. எனவே பேனர்களைத் தவிருங்கள். கழகத்தின் இரு வண்ணக் கொடியை அதிகம் பயன்படுத்துங்கள். காற்றில் அது அசைவதைப் பார்த்தபடியே வரும் போது, “வருக.. வருக..” என வரவேற்பது போலவே இருக்கும்.

கழகக் கொடியைக் காணும் போது இந்தப் பேரியக்கத்தின் தலைவர்களும் முன்னோடிகளும் நம் நினைவுக்கு வருவார்கள். நம்மை வழிநடத்தும் தலைவர் கலைஞர் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்க பட்டபாடுகள் நம் கண் முன் பளிச்சிடும். ஆயிரமாயிரம் தொண்டர்களின் தியாகத்தால் உருவான இந்த இயக்கத்தின் கொடி எப்போதும் உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும் வகையில் இலட்சியப் பாதையில் நாம் நடைபோட வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் திண்ணமாக உருவாகும்.

ஆடம்பர விளம்பரங்களைக் கைவிட்டு, இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் போது பொதுமக்களின் பேராதரவு பெருகும். புதிய இளைஞர்கள் நம்முடன் அணிவகுத்து வருவார்கள். வலிமைமிக்க கழகம் புதுப்பொலிவு பெறும். உங்களில் ஒருவனாக மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.. ஆடம்பரப் பேனர்களைக் குறைத்து, அண்ணா கண்ட இருவண்ண இலட்சியக் கொடிகளை உயர்த்துங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x