Published : 24 Feb 2017 11:31 AM
Last Updated : 24 Feb 2017 11:31 AM

திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில்: செல்வாக்கை நிரூபிக்க இரு அணியினரும் தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்தி தங்களின் பலத்தை நிரூபிக்க அதிமுகவின் ஓபிஎஸ் அணியினரும், சசிகலா அணியினரும் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவில் தீபா ஆதரவாளர்கள் என தனியாக தொண்டர்கள் சிலர் பிரிந்து புதிய அமைப்புகளை தொடங்கினர்.

இந்நிலையில், அதிமுகவில் சசிகலா தரப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் ஒன்றிணைந்தனர். ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.விஸ்வநாதன், திண்டுக்கல் மாவட்டத்தில் தனது பலத்தை காட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக இன்று நடைபெறும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட அவரது அணியினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். திண்டுக்கல் மணிக்கூண்டில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ்நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தல், ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்துதல், நலத்திட்ட உதவிகளை வழங்குதல் ஆகிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சசிகலா ஆதரவாளரான அமைச்சர் சி.சீனிவாசன் சென்னையில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், இன்று மாலையில்தான் திண்டுக்கல் வருகிறார். அவரது ஆதரவாளர்கள் சார்பில் இன்று காலையில் எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படவுள்ளது.

இருதரப்பினரிடையேயும் பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக, சசிகலா அணியினருக்கு காலை 10 மணிக்கும், ஓபிஎஸ் அணியினருக்கு காலை 11 மணிக்கும் எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.

அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் களம் இறங்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், யார் அதிக அளவில் தொண்டர்களை ஈர்த்து தங்கள் பலத்தை காட்டப்போகிறார்கள் என்பதை அறிய தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x