Published : 02 Jun 2017 11:57 AM
Last Updated : 02 Jun 2017 11:57 AM

வரப்போகிறதா மாட்டு வங்கி?- மாட்டிறைச்சி விற்பனை தடையின் பின்னணி

மாட்டையும் என் தாத்தாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்தார். அவ்வப்போது மாடுகளை விற்கவும் வாங்கவுமாக இருப்பார். தாத்தா ஒரு மாட்டை விற்கப் போகிறார் என்றால் வீட்டில் ஏதோ விஷேசம் போல என்று தெரிந்து கொள்ளலாம். மாடு விற்க தாத்தா புறப்படும் ஜோரே அலாதி தான்.

மாடு விற்கப் போகும் நாளில் மட்டும் வழக்கமாகப் போடும் மேல் துண்டிற்கு பதிலாக வேறு ஒரு துண்டை எடுத்துச் செல்வார். சற்று கடினமானதாகவும். அடர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

அப்பாரு ஏன் இன்னைக்கு வெள்ளத் துண்டு எடுத்துக்கலீங்களா என்று கேட்டால், இல்ல சாமி மாட்டை விலை பேசணும்ல அதுக்கு இந்த துண்டு தான் சரி என்பார். விரல்களில் பேசப்படும் விலை வெளியில் தெரியாமல் இருக்கவே அந்த ஏற்பாடு.

மத்திய அரசின் புதிய உத்தரவில் இறைச்சி விற்கவோ சாப்பிடவோ நாங்கள் தடை விதிக்கவில்லை என்று பாஜகவினர் தொடர்ந்து வாதாடி வருகின்றனர். ஆம் 100 சதவீதம் அவர்களின் வாதம் சரியானதே.

இந்த இடத்தில் தான் அரசின் நுட்பமான திட்டத்தைப் பார்க்க வேண்டும் ஏன் எனில் இறைச்சிக்கு தடை நேரடியாக இல்லை. அதாவது உள்ளூரில் விற்கப்படும் இறைச்சிக்கு எந்த தடையும் இல்லை.ஆனால் தற்போது விற்று வருபவர்களுக்கும் விற்கும் முறைக்கும்தான் தடை வருகிறது.

மத்திய அரசின் அரசாணையை கூர்ந்து படிக்கும் போது இரண்டு சொற்களுக்கான விளக்கம் அரசின் நோக்கத்தை விளக்குகிறது

1. ANIMAL MARKET

2. ANIMAL MARKET COMMITTEE

விலங்குச் சந்தை(ANIMAL MARKET) – என்றால் என்ன?

மிருக சந்தை(இந்த இடத்தில் மாட்டுச் சந்தை) என்றால் என்ன என்று குறிப்பிடுகிறது சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மாட்டு வண்டியிலோ அல்லது குட்டி யானை எனப்படும் மினி டிரக்கிலோ ஏன் தனியாக ஒரு மாட்டை நிறுத்தி விற்றால் கூட அது மாட்டுச் சந்தையாகவே கருத்தில் கொள்ளப்படும். இனி அப்படி விற்க முடியாது என்கிறது விதி

விலங்கு விற்கும் குழு(ANIMAL MARKET COMMITTEE) – என்றால் என்ன?

மிருக சந்தைக்கான குழு என்றால் அரசு வகுத்துள்ள புதிய விதிகளின் படி அமைக்கப்படக் கூடிய ஒரு குழு இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்கள் இருப்பார்கள்

ஒரு மாவட்டத்தில் மாட்டுச் சந்தை எங்கு நடைபெற வேண்டும் எப்படி நடைபெற வேண்டும் என்பதை இவர்களே முடிவு செய்வார்கள். அதே போல் மாடு எங்கு வெட்டப்பட வேண்டும் எப்படி வெட்டப்பட வேண்டும் என்பதையும் இவர்களே முடிவு செய்வார்கள்.

ஆக மக்கள் தங்களுக்குள்ளாகவே நடத்தி வந்த மாட்டு வியாபாரம் இனி அரசின் கட்டமைக்கப்பட்ட ஒரு செயல்பாட்டுக்குள் செல்லும்.

அரசுகளின் கட்டமைக்கப்பட்ட செயல்பாடு என்றாலே அதில் தனியார்மயம் தானே இருக்க முடியும். இருக்கப் போகிறது.

ஆக அரசின் திட்டம் என்பது இந்த புதிய விதியின்படி நிறுவனமயமாக்கப்பட்ட சந்தை முறையில் இனி மாடுகளை விற்க வழிவகுக்கும். தனியார் பெரு நிறுவனங்களே அரசின் தேர்வாக இருக்கும்.

தற்போது விவசாயிகளிடம் பால் எப்படி சில நிறுவனங்களால் நேரடியாக வீடுகளுக்கும் தோட்டங்களுக்கும் சென்று எடுத்து வரப்படுகிறதோ அப்படி இனி மாடுகள் விவசாயிகளிடம் இருந்த நேரடியாக கொள்முதல் செய்யப்படும். வீட்டின் மாடத்தில் சேமிக்கப்பட்டிருந்த விதைகள் தனியார் விதை வங்கிக்கு போனது போல்.

விவசாயிகளால் கைமாற்றப்பட்ட மாடுகள் இனி கம்பெனிகளிடம் விற்கவும் வாங்கவும் நிலையே உருவாகும்.

அப்படி வாங்கப்படும் மாடுகள், மீண்டும் மாட்டுக்கறி உண்போருக்கு சந்தை வாயிலாகவே இறைச்சியாகவே திரும்பும்.

பால் உற்பத்தி நின்று போய் 8 அல்லது 9 வயதைக் கடந்து மரணிக்கும் தருவாயில் இந்தியாவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 2.5 கோடி மாடுகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மை தான் இறைச்சி சந்தையை கட்டமைக்கின்றன. இது முழுவதும் விவசாயிகள் – சிறு வியாபாரிகள் பரிமாற்றத்தில் நிகழ்கின்றன. இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் ஒட்டுமொத்த சந்தையும் ஒன்று அல்லது இரண்டு கார்ப்பரேட்டு நிறுவனங்களின் கைகளுக்கு செல்லும்.

உள்ளூரில் நடைபெறும் இறைச்சி சந்தையால் பயன் பரவலாக இருக்கும் தன்மையை இழந்து குறிப்பிட்ட நிறுவனங்களின் நலன் சார்ந்ததாக மாறும்.

மாட்டிறைச்சி விற்பனையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகளை கருத்தியல் தளத்தில் மட்டும் எதிர்ப்பது என்பதை விட அதன் பொருளாதார நோக்கங்கள் குறித்த விமர்சனங்களே அதிகம் தேவைப்படுகின்றன. அது போன்ற விமர்சனங்களே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த முடியும். இந்தியா போன்ற உணவுச் சந்தையை கைப்பற்ற பெரு நிறுவனங்கள் நடத்தி வரும் கடும் போட்டியையும் இந்த தடை உத்தரவையும் பொருத்தி பார்க்காமல் இருக்க முடியாது.

ஆக, இனி துண்டு போட்டெல்லாம் மாட்டை விலை பேச முடியாது. விற்க வேறு வழிகள் அற்ற நிலையில் வலியோடு கம்பெனி சொல்லும் விலைக்குதான் மாடுகளை விற்க முடியும்.

ஆண்டுதோறும் தாத்தாவின் நினைவு நாளில் காட்சிப் பொருளாகும் தாத்தாவின் பச்சை துண்டை அவ்வப்போது மாடு விற்க பயன்படுத்தி வந்த அப்பாவும் இனி அதை காட்சிப் பொருளாகவே பார்க்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x