Last Updated : 12 Sep, 2016 10:04 AM

 

Published : 12 Sep 2016 10:04 AM
Last Updated : 12 Sep 2016 10:04 AM

விதிமுறைகளை கடைபிடிக்காத அதிகாரிகள்: சென்னையில் அதிகரிக்கும் சாலைகளின் உயரம்- மழைக்காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்

சென்னையில் பழைய சாலை களை பெயர்த்தெடுக்காமலே புதிய சாலைகள் போடப்படுகின்றன. இதனால், சுமார் 3 அடி வரை சாலைகளின் உயரம் அதிகரித் துள்ளதோடு, மழைக்காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மிகுந்த பொருள் சேதமும், சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. சாலை அமைப்பதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை முறை யாக பின்பற்றாததும் இதற்கு முக்கிய காரணமாகும்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திருநாவுக்கரசு கூறியதாவது:

மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் என் வீடு உள்ளது. வீட்டைக் கட்டும்போது சாலையின் உய ரத்தைவிட 3.5 அடி உயரத்துக்கு அடித்தளத்தை உயர்த்திதான் கட்டினேன். ஆனால், சாலையைப் பெயர்த்தெடுக்காமல் அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டதால் தற்போது சாலையின் உயரம் 4.25 அடியாக உயர்ந்துவிட்டது. என்னுடைய வீடு கீழேயும் சாலை உயரமாகவும் உள்ளது. சென்னையில் பெரும் பாலான இடங்களில் இதுபோன்ற நிலைதான் உள்ளது.

மாநகராட்சியில் உள்ள எந்த வொரு பொறியாளரும், சாலை யின் உயரத்தை அளந்து பார்த்து மதிப்பீடு செய்வதில்லை. புதிய சாலை அமைக்கும்போது, பழைய சாலையை இயந்திரம் (மில்லிங் மெஷின்) மூலம் பெயர்த் தெடுத்துவிட்டுதான் அமைக்க வேண்டும். ஆனால், பெரும் பாலான இடங்களில் பழைய சாலைகள் பெயர்த்தெடுக்கப்படு வதில்லை.

காரணம் என்ன?

இதன்காரணமாக சாலை உயரமாகவும் வீடுகள் சாலைக்கு கீழேயும் உள்ளன. இதுபோன்ற அமைப்பால் பெரும் மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. சாலை போடுவதை அறிவியல் ரீதியாக அணுகாததே இதற்கு முக்கிய காரணம். இவ்வாறு திருநாவுக்கரசு கூறினார்.

சென்னை கட்டுமான பொறி யாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் இ.வெங்கடாச்சலம் கூறியதாவது: அந்தந்த இடங்களில் உள்ள நீர்நிலைக்கு தகுந்தபடிதான் சாலைகளின் உயரம் நிர்ணயிக்கப்பட வேண் டும். இந்தியாவில் மட்டும்தான் இந்த விதிமுறையை கடைபிடிப்ப தில்லை. இடத்துக்கேற்பவே வடிகால்களையும் அமைக்க வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அளவு பார்க்காமலே வடிகால்களை அமைக்கின்றனர். இதனால், சாலைகளில் ஆங்காங்கே தண் ணீர் தேங்குகிறது. மழைநீர் வடிகால்களை அமைப்பவர் களுக்கு அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்று தெரியாத நிலைதான் உள்ளது.

வீணாகும் வரிப்பணம்

கடந்த ஆண்டு மழைக் காலத்தின்போது 88 இடங்களில் சாலைகள் வெட்டி தண்ணீரை வடித்தனர். தற்போது அந்த இடங்களை மூடிவிட்டனர். மீண்டும் கன மழை பெய்தால் அந்த இடங்களில் நிச்சயம் பாதிப்பு இருக்கும். இப்படிப்பட்ட தவறுகளால் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகிறது.

மேலும், கழிவுநீர் மேன் ஹோல் லெவல் உயர்த்தி வைக்கப் படுவதால் ஆண்டுக்கு சராசரியாக 60 பேர் வரை உயிரிழக்கின்றனர். சுமார் 150 பேர் வரை கை, கால்களை இழக்கின்றனர். இனிமேலாவது எங்கு மேடு, பள்ளங்கள் உள்ளது என்று இடஅமைப்பியல் (டோபோகிராபி) ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வின் அடிப்படையில், சாலையின் உயரத்தை இடத்துக்கு தகுந்தாற்போல் நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஓராண்டாக பேருந்து வழித்தடங்களில் மில்லிங் இயந் திரத்தைப் பயன்படுத்தி சாலை களைப் பெயர்தெடுத்துவிட்டுதான் புதிய சாலைகளை அமைத்து வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x