Published : 24 May 2017 12:02 PM
Last Updated : 24 May 2017 12:02 PM

போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் கனமழை; 1500 தென்னை மரங்கள் சாய்ந்தன

போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் 1500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர், போச்சம்பள்ளி, அரசம்பட்டி பகுதியில் விவசாயிகள் தென்னை, மா மரங்கள், பணப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறாவளியைத் தாக்குப்பிடிக்க முடியாமல், தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் வேருடன் சாய்ந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுப் பாதைகளிலும் மரங்கள் விழுந்ததால் இவ்வழியே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.


அரசம்பட்டி பகுதியில் உள்ள தோப்பில் தென்னை மரங்கள் விழுந்ததால் தேங்காய்கள் சிதறிக்கிடந்தன.

இதே போல் புலியூர் அருகே துறையூர், பாப்பானூர் உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆமணக்கம்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் சேதமாகின.

போச்சம்பள்ளி, மத்தூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், நாகரசம்பட்டி பகுதிகளில் சூறாவளியால் 300-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. இக்கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். மின்கம்பங்களை சரி செய்ய 2 நாட்களாகும் என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

சூறாவளிக் காற்றால் போச்சம்பள்ளி வட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வட்டாட்சியர் பண்டரிநாதன் கூறுகையில், ‘‘மழைக்கு 17 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 7 வீடுகளில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. 1500-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. சாலையோரம் விழுந்துள்ள 300-க்கும் மேற்பட்ட மரங்கள் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் அகற்றப்படும். கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதால் சேதத்தின் மதிப்பு அதிகரிக்கும்,’’ என்றார்.


கீழ்க்குப்பம் பகுதியில் சூறாவளியில் சிக்கிய டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது.

கீழ்குப்பம் பகுதி விவசாயிகள் கூறும் போது, ‘‘20 நிமிடங்கள் வீசிய சூறாவளிக் காற்றுக்கு தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன. எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள மரங்களை இழந்துள்ளோம். இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: போச்சம்பள்ளி -40.80, பாரூர் -36.40, சூளகிரி -29, தேன்கனிக்கோட்டை -27, பெனுகொண்டாபுரம் -25.20, தளி -25, நெடுங்கல் -14.60, கிருஷ்ணகிரி -11.80, ஓசூர் -11, அஞ்செட்டி -10, ராயக்கோட்டை -5, ஊத்தங்கரை -3.40 என மொத்தம் 239.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x