Last Updated : 27 Feb, 2017 08:52 AM

 

Published : 27 Feb 2017 08:52 AM
Last Updated : 27 Feb 2017 08:52 AM

ஊரப்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் நிலையம்: வரைபடம் தயாரிப்பு பணி தீவிரம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை புறநகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக வண்டலூரில், 65 ஏக்கர் பரப்பளவில், ரூ.376 கோடி மதிப்பில் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு 2013-ம் ஆண்டு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச் சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளி யிட்டார். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பால் திட்டம் தடைபட்டது.

இந்நிலையில் ஊரப்பாக்கம் ஊராட்சி கிளம்பாக்கம் கிராமத்தில் 88.53 ஏக்கர் நிலத்தை சிஎம்டிஏ அதிகாரிகள் கையகப்படுத்தினர். இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர். இதனையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளில் சிஎம்டிஏ தீவிரமாக இறங்கியது.

புதிய பஸ் நிலையம் கட்ட ஆலோசனை, திட்ட மதிப்பு, வரைபடம் தயாரிக்கவும், விரிவான திட்ட அறிக்கை போன்ற பணிகளுக்கும் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 9 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஒரு மாதத்தில் திட்ட மதிப்பீடு, வரைபடம், அறிக்கையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திட்ட மதிப்பு, மாதிரி வரைபடம் ஆகியவை நிறுவனம் வழங்கிய பின் அரசின் முடிவுக்கு கொண்டு சென்று இறுதி செய்யப்படும். இந்த திட்டம் நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் தென் மாவட்ட பயணிகள் எந்தவொரு சிரமமுமின்றி சொந்த ஊர்களுக்கு பயணிக்கலாம், இது குறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய புறநகர் பஸ் நிலையத்தை, சர்வதேச தரத்தில் மேற்கொள்ள, சிஎம்டிஏ முயற்சிகளை மேற்கொண் டுள்ளது. பஸ் நிலையத்தின் திட்ட மதிப்பு, மாதிரி வரைபடத்தை, ஒரு மாதத்துக்குள் அளிக்க வேண்டும் எனவும், இதற்காக தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆணை வழங்கப் பட்டுள்ளது. அந்த நிறுவனம் அறிக்கை வழங்கிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x