

ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் நெய், வெண்ணெய், இனிப்பு ஆகியவற்றின் விலைகளை 10 முதல் 15 சதவீதம் வரை விரைவில் விலை உயர்த்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு கடந்த சனிக் கிழமை ஆவின் பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்படும் இதர பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆவின் நிர்வாகத்தின் சார்பில் பால் தவிர்த்து சுமார் 17க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆவின் நெய், வெண்ணெய், 9 வகையான ஐஸ்கிரீம், 5 வகையான இனிப்புகள், பாதாம் பவுடர், மோர், லஸ்ஸி, ஆகியவை பொது மக்கள் அதிகமாக வாங்கக் கூடிய பொருட்கள் ஆகும். இது தவிர 43 வகைகளில் ஆவின் பொருட்கள் ஆவின் பூத்கள் மூலம் கிடைக்கிறது.
சென்னையில் உள்ள அம்பத்தூர் பால் உற்பத்தி நிலை யத்தில் மட்டும்தான் இதர ஆவின் பொருட்கள் தயாரிக்கப் படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் முதல் 2014-ம் ஆண்டு மார்ச் வரையிலான நிதி ஆண்டில் ஆவின் பால் தவிர்த்த இதர பொருட்கள் மூலம் ரூ.27 கோடியே 36 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது விற்பனையில் உள்ள ஆவின் நெய் ஒரு கிலோ ரூ. 365, வெண்ணெய் 500 கிராம் ரூ. 160, பாதாம் பவுடர் ஒரு கிலோ ரூ.340, லஸ்ஸி ரூ. 20, 8 வகையான மில்க் ஷேக் ரூ. 20 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து ஆவின் நிர்வாகம் தரப்பில் கேட்டபோது, “ஆவின் பால் விலை உயரும் பட்சத்தில் அதனை சார்ந்த இதர பொருட்களின் விலையும் உயர்த்தப்படும். இதர பொருட்களின் விலைகள் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்படலாம்'' என்றனர்.