Published : 25 Oct 2014 08:28 AM
Last Updated : 25 Oct 2014 08:28 AM

மேட்டூர் அருகே வனப்பகுதியில் காயங்களுடன் ஆண் சடலம்: கர்நாடக சோதனைச் சாவடி எரிப்பு; எல்லையில் பதற்றம்

மேட்டூர் அருகே பாலாறு வனப்பகுதியில் தமிழர் ஒருவரின் சடலம், குண்டுக் காயங்களுடன் கிடந்தது. அவரை கர்நாடக வனத்துறையினர் சித்ரவதை செய்து கொன்றதாக பரவிய தகவலையடுத்து, தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் கோவிந்தபாடி, செட்டிப்பட்டி, ஏமனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா (42), செட்டிப்பட்டியை சேர்ந்த பழனி, நெட்டகாளன் கொட்டாயை சேர்ந்த முத்து சாமி, சேத்து, லட்சுமணன் ஆகியோர் கர்நாடக வனப்பகுதிக்குள் மான் வேட்டைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த கர்நாடக வனத்துறையினர் காட்டுக்குள் இருந்த வேட்டை கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், ராஜாவுக்கு குண்டடி பட்டதாக தகவல் வெளியானது. இது சம்பந்தமாக கொளத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று காலை காரைக்காடு என்ற வனப்பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் குண்டடிபட்டு தண்ணீரில் மிதப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, போலீஸார் சென்று பார்த்தபோது, வேட்டை கும்பலைச் சேர்ந்த பழனி என்பவர் குண்டடிபட்டு இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது. கைகள் வெட்டப்பட்டும், தலையில் பலத்த காயத்துடனும் பழனியின் சடலம் கிடந்தது.

கோவிந்தபாடி, கொளத்தூர் மற்றும் தமிழக, கர்நாடக எல்லையோர கிராம மக்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது, கர்நாடக வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்த வன அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்று விட்டனர். கர்நாடக வனத்துறையினர் பழனியை உயிருடன் பிடித்து சித்ரவதை செய்து, சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல் பரவியதை அடுத்து, மாதேஸ்வரன்-மேட்டூர் வழித் தடத்தில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கர்நாடக வனத்துறைக்கு சொந்தமான இரண்டு சோதனைச் சாவடிகளை தீயிட்டு கொளுத்தினர். சோதனைச் சாவடியில் இருந்த வயர்லெஸ் கருவி, பைக் தீயில் எரிந்து நாசமாயின. கர்நாடகாவில் இருந்து மேட்டூர் வந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை வழியாக செல்லும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

தமிழக-கர்நாடக எல்லையில் மக்கள் போராட்டத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் சரக டிஐஜி வித்யாகுல்கர்னி, எஸ்பி சக்திவேல் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். கொள்ளேஹால், சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து கர்நாடக போலீஸார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஜூலியஸ் கூறும்போது, ’’ஒருவேளை பழனி அத்துமீறி நுழைந்திருந்தால், அவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். பழனியின் கைகளை வெட்டியும், தலையில் கொடுங்காயம் ஏற்படுத்தியும், உயிர் நிலையை சிதைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். கொள்ளேஹால் போலீஸார் பழனியின் சடலத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள் ளனர். கர்நாடகாவில் இந்த வழக்கு நடக்கும்பட்சத்தில் நியாயம் கிடைக்காது. எனவே, இந்த வழக்கை தமிழக போலீ ஸார் நடத்த வேண்டும் என்று டிஜிபிக்கு மனு அளிக்கவுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x