Published : 10 Feb 2017 10:22 AM
Last Updated : 10 Feb 2017 10:22 AM

பாலாற்றில் கலக்கும் தோல் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதுடன், நிலத் தடி நீர் மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில், ராணிப் பேட்டை, சிப்காட், ஆம்பூர், வாணி யம்பாடி, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின் றன. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் பாலாற்றை ஒட்டியுள்ள தொழிற் சாலைகளில் இருந்து தோல் ஏற்று மதி அதிகளவு நடைபெறுகிறது.

தோல் தொழிற்சாலைகளில் குரோமியம் அதிகமுள்ள ரசாயனங் களை பயன்படுத்தி தோல் பதனிடப் படுகிறது. இது மட்டுமின்றி, சோடி யம் குளோரைடு, சோடியம் சல்பேட், சல்பியூரிக் ஆசிட், குரோமியம் சல்பேட் என 170-க்கும் மேற்பட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தி தோல் பதனிடப்படுகின்றன. 35 லிட்டர் தண்ணீரை கொண்டு 1 கிலோ தோல் பதனிடப்படுகிறது.

ரசாயன முறையில் பதனிடப் படும் தோல் கழிவுகளை பாலாற்றி லேயே திறந்து விடுகின்றனர். இதனால், பாலாற்றுப்படுகை தோல் கழிவுகளால் மாசடைந்து, பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யுள்ள தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவுகளை பாலாற்றில் திறந்து விடுவது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத் தில் 120 கிலோ மீட்டர் தொலை வுள்ள பாலாற்றுப் படுகையின் பெரும்பகுதி தோல் கழிவுகளால் மாசடைந்துள்ளது. பயன்படுத்த தகுதியில்லாத நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்படு கிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன.

ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் பகுதிகளில் தோல் தொழிற்சாலை களில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவுகளை பாலாற்றில் கொட்டி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை மட்டுமின்றி, வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து ஒரு நாளைக்கு 80 லட்சம் லிட்டர் கழிவுகள் பாலாற்றில் கொட்டப்படுகின்றன. இதனால், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சுற்றுச்சூழல் அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர். எனவே, பாலாற்றில் தோல் கழிவுகளை கலக்கும் தொழிற்சாலை நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

இதுகுறித்து வேலூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாவட்டம் முழுவதும் உள்ள தோல் தொழிற்சாலைகளில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ராணிப்பேட்டை பாலாற்றில் தோல் கழிவுநீர் கலக்கப்படுவது குறித்து எங்களிடம் புகார் ஏதும் வரவில்லை. இருப்பினும், உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x