Published : 13 Oct 2014 11:36 AM
Last Updated : 13 Oct 2014 11:36 AM

சர்வதேச போட்டியில் பங்கேற்க முடியாமல் மாற்றுத் திறனாளிகள் தவிப்பு: வறுமையால் ‘வாடும்’ மீனவ கிராம வீரர்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச வாள் சண்டை போட்டிக்கு தேர்வான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் வறுமை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஷிராந்தி (28) மற்றும் ஜோசப் சுரேஷ் (32) ஆகிய இருவர் மாற்றுத் திறனாளிகளுக்கான வாள் சண்டை போட்டியில் பங்கேற்று சாதித்து வருகின்றனர்.

இருவரும் டிசம்பரில் ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். ஆனால், பொருளாதார சூழலால் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

நீளும் பட்டியல்

விளையாட்டு சாதனை குறித்து ஷிராந்தி கூறியதாவது:

நான் பி.காம் பட்டதாரி. கணினி தொடங்கி, மல்டிமீடியா வரை ஏகப்பட்ட டிப்ளமோ கோர்ஸ் படிச்சுருக்கேன். நான் பிறந்து 10-வது மாசத்துல என் கால்கள் இப்படி ஆகிருச்சு. மாற்றுத் திறனாளிகளுக்கான வீல் சேர் ஓட்டத்தில் நிறைய முறை மாநில, மாவட்ட அளவில் பரிசு வாங்கிருக்கேன்.

எங்க ஊரைச் சேர்ந்த சுரேஷ் அண்ணன்தான் மாற்றுத் திறனாளிகளுக்கான வீல் சேர் வாள் சண்டை போட்டி இருப்பதாக சொல்லி எனக்கு கற்றுக் கொடுத்தார். அதில் குறுகிய காலத்தில் நன்கு பயிற்சி பெற்று விட்டேன். கடந்த 2011-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தேன். 2012-ம் ஆண்டு இரண்டாம் இடம் கிடைத்தது.

கருகும் கனவு

என் கூட பிறந்தவங்க மொத்தம் 6 பேரு. 5 பெண்கள். நான் 4-வது பெண். அப்பா மீன் தொழிலுக்கு போயிடுட்டு இருக்காங்க. விளையாட்டுத் துறையில் சாதிப்பதுதான் என் லட்சியம். என் குடும்பத்தோட கனவும்கூட.

இந்த சூழலில்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச வாள் சண்டை போட்டியில் கலந்துகொள்ள பெங்களூரில் நான் பங்கேற்று தேர்வானேன்.

வெளிநாடு போய் விளையாடும் அளவுக்கு என் வீட்டில் பொருளாதார வசதி இல்லை. நவம்பரில் ஹங்கேரி நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவும் தேர் வாகியுள்ளேன். ஆனால் பொருளாதார வசதி இல்லாத தாலும், உதவி கிடைக்காததாலும் போக முடியாத நிலையுள்ளது.

டிசம்பரில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தேர்வாகி இருப்பது குறித்தும், எனது நிலை குறித்தும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளேன் என்றார் அவர்.

இலக்கியத்திலும் பரிசு

ஜோசப் சுரேஷ் (32) கூறியதாவது:

எனது 7-வது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால்கள் ஊனமாகிடுச்சு. மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. எங்கள் வகுப்பில் நானும், இன்னொரு பையனும் மாற்றுத் திறனாளிகள். உடனே எனது ஆசிரியர் ஸ்டெல்லா, எங்களுக்கு தனியாக ஓட்டப் பந்தய போட்டி நடத்தினாங்க. பள்ளி காலங்களில் இலக்கிய போட்டிகளில் பரிசு வாங்கியுள்ளேன்.

நான் குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்க செயலாளராகவும் உள்ளேன். மதுரைக்கு போயிருந்தபோது தான் மாற்றுத் திறனாளி களுக்கு என தனி வாள் சண்டை போட்டி இருப்பது தெரிந்தது. அங்கு ஒரு வாரம் தங்கி பயிற்சி பெற்றேன்.

வெண்கலம் பெற்று சாதனை

கடந்த 2007-ம் ஆண்டு வாள் சண்டை போட்டியில் தேசிய அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்றேன். அதே ஆண்டு தைவானில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 3- வது இடம் பெற்று, இந்தியாவுக்கு முதல் வெண்கல பதக்கத்தை வாங்கி கொடுத்தேன்.

தொடர்ந்து பலமுறை வீல் சேர் வாள் சண்டையில் மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளேன்.

தற்போது மீன் வியாபாரம் செய்து வருகிறேன் அதில் கிடைக்கும் சொற்ப வருமானம் என் விளையாட்டு ஆர்வத்துக்கு போதுமானதாக இல்லை. என்னால் விளையாட்டையும் விட முடியவில்லை.

ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கு பெற ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அரசு உதவிட வேண்டும்” என்றார்.

தேசத்தின் அவமானம்

மாற்றுத் திறனாளிகளுக்காக குரல் கொடுத்துவரும் தெற்காசிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் ஃபாதர் சர்ச்சில் கூறியதாவது:

உலக அரங்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த ஜோசப் சுரேஷிடமும், இந்திய அளவில் வெற்றி பெற்று வரும் ஷிராந்தியிடமும் இந்த விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் சொந்தமாக இல்லை. இரவல் வாங்கித்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

உபகரணங்கள் விலையே லட்சத்தை தாண்டுகிறது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் வறுமையின் பிடியில் சிக்கி சுழல்வது தேசத்தின் அவமானம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x