Published : 14 May 2017 04:36 PM
Last Updated : 14 May 2017 04:36 PM

அனைத்து மாவட்டங்களிலும் கடும் வறட்சி: காய்கறிகள் விலை உச்சம்

தமிழகத்தில் வறட்சியால் வெளி மாநில காய்கறிகள் வரத்தால் அதன் விலை உச்சமாக இருக்கிறது.

இந்தியா காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் 166.61 மில்லியன் டன்கள் காய்கறிகள் உற்பத்தி செய்கிறது. தமிழகத்தில் 2.907 லட்சம் ஹெக்டேரில் 77.716 லட்சம் டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழகம் காய்கறி உற்பத்தியில் 9வது இடத்தில் இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், கிழங்குகள், நவதானிய பயிர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் என சுமார் 20,000 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இதில் காய்கறிகளை மட்டும் 2,600 ஹெக்டேரில் சாகுபடி செய்கின்றனர். வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பொய்த் ததால் காய்கறிகள் உற்பத்தி கடந்த ஒரு ஆண்டாக படிப்படியாக குறைந்தது. அப்படியே சில இடங்களில் உற்பத்தியானாலும், அவை தரமில்லாமல் முன்பிருந்த சுவையும், மணமும் இல்லாமல் இருக்கின்றன.

அதனால், சந்தைகளில் காய்கறிகள் உற்பத்தி குறைந்தது. மதுரை சென்டரல் மார்க்கெட்டில் காலை 7 மணிக்கெல்லாம் காய்கறிகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அதன்பிறகு தரமில்லாமல் காய்ந்து சூம்பி போன காய்கறிகள் மட்டுமே விற்கப்படுகின்றன. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய் முதல் 80 வரை விற்பனையாகிறது. பட்டர் பீன்ஸ் கிலோ 140 ரூபாய், பட்டர் பட்டானி 90 ரூபாய், காரட் 55 ரூபாய் முதல் 60 ரூபாய், பீட்ரூட் 40 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய் முதல் 70 ரூபாய், புடலங்காய் 5 ரூபாய், பீர்க்கங்காய் 60 ரூபாய், பச்சை மிளகாய் 50 ரூபாய், சேனைக்கிழங்கு 35 ரூபாய் விற்பனையாகிறது. பாகற்காய் கிலோ 50 ரூபாய் விற்றாலும், உற்பத்தியில்லாததால் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதே இல்லை. அதனால், சந்தைகளில், சில்லரை விற்பனை கடைகளில் பாகற்காய் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது.

60 ரூபாய்க்கு விற்கப்படும் காரட் தரமாக இல்லாமல் காய்ந்து கழிவு காரட்தான் தற்போது விற்கப்படுகிறது. முட்டைகோஸ் கிலோ 20 ரூபாய்க்கு விற்றதாலும் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும் கோஸ்தான் அதிகளவு விற்பனைக்கு வருகின்றன. அதுபோல், முள்ளங்கி 20 ரூபாய், சவ்சவ் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் மட்டமான காய்கறிகளே, பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

அதனால், காய்கறிகள் வாங்க முடியாமல் நடுத்தர மக்கள் சிரமப்படுகிறார்கள்.

தை பட்டத்தில் சாகுபடி செய்த காய்கறிகள்தான் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. அப்போதே வறட்சி இருந்ததால் காய்கறிகள் உற்பத்தி இயல்பாகவே குறைந்துவிட்டது.

பெரியளவில் காய்கறிகள் உற்பத்தி இல்லாததால், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் காய்கறிகள்தான் தற்போது தமிழகத்திற்கு விற்பனைக்கு வருகிறது. போக்குவரத்து செலவு, ஏற்றுக்கூலி, இறக்குகூலி, லாபம் எல்லாவற்றையும் சேர்பதால் காய்கறி விலை சந்தைகளில் உயர்ந்துவிட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x