Published : 15 Jul 2016 06:20 PM
Last Updated : 15 Jul 2016 06:20 PM

செங்கம் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தை தாக்கிய போலீஸாரை பணியிடை நீக்கம் செய்க: ஜி.ராமகிருஷ்ணன்

செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தை தாக்கிய காவல்துறையினர் மூவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஜூலை 11 அன்று ஆட்டோ ஓட்டுநர் ராஜா அவரது மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோர் மீது பட்டப்பகலில் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

செங்கம், சந்தைப் பகுதியில் நடந்து சென்ற போது கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட்டு காவல்துறையினர் அவர்களை கன்னத்தில் அறைந்து, லத்தியால் கொடூரமாகத் தாக்கி, ராஜாவின் மனைவி ஜாக்கெட்டையும் கிழித்துள்ளனர். இதை கண்ணுற்ற பொதுமக்கள் தங்களது துண்டு கொடுத்து ராஜாவின் மனைவியை பாதுகாத்துள்ளனர்.

சட்டம் - ஒழுங்கை காப்பாற்றி, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அமைதியை நிலைநிறுத்த வேண்டிய காவல்துறையினரே பொதுமக்கள் மீது பொதுவெளியில் கொடூரத் தாக்குதலை நடத்துவது காவல்துறையினரின் அத்துமீறல் மட்டுமல்ல - மக்களை அச்சுறுத்தும் அடாவடித்தனமாகும் - அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

இத்தகைய கொடூரத்தை நிகழ்த்திய காவல்துறையினரை தமிழக அரசு பணியிடை நீக்கம் கூட செய்யவில்லை, பணியிட மாறுதல் மட்டுமே செய்துள்ளது. இந்த நடவடிக்கை காவல்துறையினரின் அத்துமீறல்களை கண்டிக்கவோ, கட்டுப்படுத்தவோ உதவாது. பொதுவெளியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூர குற்றச் செயல் புரிந்தவர்கள் மீது மாவட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மூவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x