Published : 03 Apr 2017 02:42 PM
Last Updated : 03 Apr 2017 02:42 PM

திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்தை செயலிழக்க வைத்தது அதிமுக அரசின் மாபெரும் துரோகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்தை அதிமுக அரசு செயலிழக்க வைத்தது திராவிட சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிட இயக்க ஆராய்ச்சி மையம் அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று இன்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திராவிட இயக்க வரலாறுகளை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் சிறப்புமிக்க இந்த மையத்தை திராவிட என்ற சீரிய பெயரை தன் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டு நாட்டு மக்களை நாள்தோறும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் அதிமுக அரசு செயலிழக்க வைத்திருப்பது திராவிட இனத்தைச் சேர்ந்த அனைவரது நெஞ்சங்களிலும் எரிமலையாகக் கனன்று கொண்டிருக்கிறது.

தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக அரசு அமைந்த 2006-ஆம் ஆண்டில் திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்திற்கான விதை இடப்பட்டது. குறிப்பாக 2006-2007 நிதி நிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்து பேசிய பேராசிரியர் க.அன்பழகன் சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், 'எதிர்காலத் தலைமுறை திராவிட இயக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு வழி வகுக்கும் வகையில் திராவிட இயக்கம் பற்றி ஆய்வு மேற்கொள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க ஆராய்ச்சி மையம் நிறுவப்படும்' என்று அறிவித்தார். இந்த நிதி நிலை அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் உடனடியாக சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தரின் பரிந்துரையைப் பெற்று, 12.12.2006 தேதியிட்ட அரசு ஆணை எண் 399-ன்படி திராவிட இயக்க ஆராய்ச்சி மையம் சென்னை பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது.

அந்த ஆராய்ச்சி மையம், 1) பெரியார் ஈ.வெ.ரா பகுத்தறிவு மற்றும் பாலின நீதி இருக்கை 2) அறிஞர் அண்ணா தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் அரசியல் சிந்தனை இருக்கை. 3) சமூக, பொருளாதார, சம நீதி இருக்கை 4) மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இருக்கை ஆகிய நான்கு இருக்கைகள் கொண்டதாக செயல்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

அது மட்டுமின்றி இந்த மையத்திற்கு அதே அரசாணையில் 3.9 கோடி ரூபாய் நிதியினை அனுமதித்து, அதில் ஒரு கோடி ரூபாய் உடனடியாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 2.9 கோடி ரூபாயை மனித வள மேம்பாட்டுத்துறை வழங்கும் நிதியிலிருந்து செலவு செய்யவும் அந்த அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டது

இப்படி வரலாற்று சிறப்பு மிக்க திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்திற்கு ஒதுக்கிய நிதியை செலவு செய்யவில்லை என்பது ஒருபுறமிருக்க, 2013 ஆம் ஆண்டில் 1.14 கோடி ரூபாய் நிதி கேட்டு உயர் கல்வித்துறைக்கு சென்னை பல்கலைக்கழகம் விடுத்த கோரிக்கையையும் அதிமுக அரசு ஏற்கவில்லை என்பது திராவிட இயக்க வரலாறு வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் ஆட்சியிலிருந்த அதிமுக அரசு எவ்வளவு கீழ்த்தரமாக செயல்பட்டுள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது.

திராவிட இயக்கத்தின் பெருமைகளை இருட்டடிப்பு செய்யவும், இளைய தலைமுறையினர் அந்த வரலாற்றை- குறிப்பாக சம நீதி, சமூக நீதி வரலாற்றை அறிந்து கொண்டு விடக்கூடாது என்ற திராவிட எதிர்ப்பு வஞ்சக எண்ணத்துடன் அதிமுக அரசு இந்த மையத்தை முடக்கி வைத்தது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

நீதிக்கட்சியின் வரலாறு, திராவிட இயக்க போராட்டம் மற்றும் கறுப்பர் இனப் போராட்டங்களை ஒப்பீடு செய்த ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான ஆய்வுகள், புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் வெளியிட உருவாக்கப்பட்ட திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்தை அதிமுக அரசு செயலிழக்க வைத்தது திராவிட சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் சென்று சந்தித்த ஒரே காரணத்திற்காக சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியைப் பெற்ற தாண்டவன் இப்படியொரு துரோகத்திற்குத் துணைபோயிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே திராவிட இயக்க ஆராய்ச்சி மையம் முழு வீச்சில் செயல்படுவதற்கு அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக இருக்கும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் 'திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்தை இயங்க வைக்க அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறேன்' என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x