Published : 19 Jun 2017 01:59 PM
Last Updated : 19 Jun 2017 01:59 PM

டாஸ்மாக் உபரி ஊழியர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்: ராமதாஸ்

டாஸ்மாக் பணியாளர்களில் உபரியாக உள்ள தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பிற துறைகளில் அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ற பணிகளை வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாமக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், அவற்றில் பணியாற்றி வந்த 15 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வம் காட்டும் அரசு, அதன் பணியாளர் நலனில் அக்கறை காட்டாதது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் அனைத்து சமூகத் தீமைகளுக்கும் மது தான் முக்கியக் காரணமாக விளங்குகிறது. சாலை விபத்துகள், தற்கொலைகள், இளம் விதவைகள் உருவாகுதல் உள்ளிட்ட சமூகக் கேடுகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் மது அரக்கன் தான். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் பாமக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி தேசிய, மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் அமைந்திருந்த 3321 மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்றது.

அதன்படி 3321 மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், சில நூறு கடைகள் மட்டும் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் திறக்கப்பட்டன. மீதமுள்ள, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றி வந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.

தமிழகத்தின் மிகப்பெரிய சமூகத் தீமையாக விளங்கும் மதுக்கடைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டது கொண்டாட்டத்திற்குரிய செய்தியாகும். ஆனால், அதேநேரத்தில் இதனால் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், அதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப பிற அரசுத் துறைகளில் மாற்றுப்பணி வழங்குவது தான் சரியான செயலாக இருக்கும்.

மாறாக, டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் மதுக்கடைகளை திறப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு தேர்வு செய்து அங்கு கடை அமைக்கப்பட்டால் மட்டும் தான் அவர்களுக்கு பணியும், ஊதியமும் வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் கட்டுப்பாடு விதிப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக ஊதியமும் வழங்கப்படவில்லை என்பதால் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கல்விக்கட்டணம் செலுத்துவதற்குக் கூட வழியில்லாமல் அவர்களின் குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றன.

மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் ஒப்பந்தப் பணியாளர்கள் தான் என்றாலும் அவர்களுக்கென சில பணிப் பாதுகாப்பும், உரிமைகளும் உள்ளன. அவற்றின்படி, அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட வேண்டும். மாறாக, மதுக்கடைகள் மூடப்பட்டதால் பணி வழங்க முடியாது என எந்த நிறுவனமும் கூற முடியாது. அவ்வாறு கூறுவது தொழிலாளர் சட்டங்களுக்கு விரோதமான செயலாகும். சட்டங்களை மதிக்க வேண்டிய தமிழக அரசே, அதன் சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது ஏற்க முடியாத, கண்டிக்கத்தக்க செயலாகும்.

முறையான ஊதிய உயர்வின்மை, பணிப் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மாநாடு நடைபெறவிருக்கிறது.

அரசு மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களில் 98.26 விழுக்காட்டினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி வகுப்பினர் ஆவர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், டாஸ்மாக் பணியாளர்களில் உபரியாக உள்ள தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பிற துறைகளில் அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ற பணிகளை வழங்க அரசு முன்வர வேண்டும். அவர்கள் தவிர டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x