Published : 13 Oct 2014 05:10 PM
Last Updated : 13 Oct 2014 05:10 PM

பிரெஞ்ச் பேராசிரியர் ழான் டிரோலுக்கு பொருளாதார நோபல்

சந்தைத் திறன் மற்றும் ஒழுங்குமுறை பற்றிய ஆய்விற்காக பிரெஞ்ச் பொருளாதார நிபுணர் ழால் டிரோல், 2014-ன் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வென்றார்.

61 வயதாகும் டிரோல், சக்திவாய்ந்த நிறுவனங்கள் கோலோச்சும் இன்றைய பொருளாதாரக் காலக்கட்டத்தில் தொழிற்துறையை ஒழுங்கமைத்தல் பற்றிய இவரது ஆய்வுப் பங்களிப்பு அபரிமிதமானது என்று நோபல் அகாடமி தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

இன்றைய தொழிற்துறை, மிகப்பெரிய நிறுவனங்கள் அல்லது ஒரே நிறுவனத்தின் ஏகபோகம் போன்றவற்றினால் ஆதிக்கம் பெற்றுள்ளது. இவற்றை ஒழுங்குமுறைக்கு உட்படுத்த முடியாமல் போனதால் இவை ஆதிக்கம் செலுத்தும் சந்தைகள் சமூக ரீதியாக விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கியுள்ளது.

பொருளின் அடக்கவிலைகளை மட்டுமீறிய சந்தை விற்பனை விலை நிர்ணயம், அல்லது உற்பத்தியே செய்யாமல் இருக்கும் நிறுவனம் தங்களது அதிகாரத்தினால் உற்பத்தி சக்திமிக்க புதிய தொழில் நிறுவனங்களை வரவிடாமல் தடுத்தல் போன்றவை தற்போது பெருகியுள்ளன.

1980ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்து ழான் டிரோல் இத்தகைய சந்தைத் தோல்விகள் பற்றிய ஆய்வுக்கு புதிய உயிர் கொடுத்தார். சந்தை ஆதிக்கம் மிக்க நிறுவனங்கள் பற்றிய இவரது ஆய்வு அரசுகளின் கொள்கை வகுத்தல்களில் புதிய கேள்விகளை எழுப்பியது.

நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவது, அல்லது மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையில் போட்டியின் விளைவினால் புதிய நிறுவனங்கள் உள் நுழைந்து தங்களது சந்தை ஆதிக்கத்தை குறைக்கும் விளைவுகளைத் தடுக்க ஒன்றை ஒன்று வாங்கி/விழுங்கி (கார்டெல்) வரும் நடவடிக்கைகளையும், தனி நிறுவனத்தின் சந்தை ஏகபோகத்தையும் தேச/அரசுகள் எவ்வாறு கட்டுப்படுத்தி ஒழுங்குமுறை செய்ய வேண்டும் என்பது பற்றி கொள்கை முடிவுகளையும் இவரது ஆய்வுகள் எடுத்தியம்பியுள்ளன.

டிரோலுக்கு முன்பாக, அனைத்துத் தொழிற்துறைகளுக்கும் பொதுவான கொள்கைகளையே வகுத்தன. ஏகபோக உரிமை கொண்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் மீது அதிகபட்ச விலை வரம்பை நிர்ணயிப்பது, போட்டியாளர்கள் ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தடை செய்தல் என்று சாதாரண கொள்கை வகுத்தல்களையே மேற்கொண்டனர்.

டிரோல் இத்தகைய கொள்கைகள் சில சூழ்நிலைகளில் வெற்றியடையலாம் ஆனால் பிற சூழல்களில் இது அதிகத் தீமையையே விளைவிக்கும் என்று இவர் கோட்பாட்டு ரீதியாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

விலை உச்சவரம்பை நிர்ணயிதலால் நிறுவனங்கள் உற்பத்திச் செலவைக் குறைக்கும் இது சமூகத்திற்கு ஒரு விதத்தில் நல்லது ஆனால் அதே வேளையில் ஆட்குறைப்பு போன்ற தீமையான விளைவுகளையும் ஏற்படுத்தும். அதேபோல் கார்ப்பரேட் மெகா நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவது போட்டியை திசைத் திருப்பும் முயற்சியாக அமையும்.

ஆகவே ஒவ்வொரு தொழிற்துறைகளின் செயல், நடைமுறைகளுக்கேற்ப தனித்தனி கொள்கைகளை அரசுகள் வகுப்பதே சிறந்தது என்று இவர் தனது ஆய்வுக் கட்டுரைகள் மூலம் உதாரணங்களுடன் நிறுவியுள்ளார்.

தொலைத் தொடர்புத் துறை முதல் வங்கித் துறை வரையிலும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்கள் அன்றாடப் பிரச்சினைகளில் பங்கு வகிக்கும் துறைகளின் லாபவேட்டைப் போக்கையும் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி இவரது ஆய்வுகள் புதிய வெளிச்சங்களைக் கொடுத்துள்ளது.

சக்தி வாய்ந்த நிறுவனங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசுகள் ஊக்குவிக்கும் அதே நேரத்தில் சந்தைப் போட்டிகளையும், நுகர்வோரையும் மழுங்கச் செய்யும் போக்குகளையும் கட்டுப்படுத்துவது அவசியம் என்பதை இவரது ஆய்வுகள் வலியுறுத்தியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x