Published : 28 Apr 2017 12:50 PM
Last Updated : 28 Apr 2017 12:50 PM

சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் வழக்கில் ஹவாலா தரகர் டெல்லியில் கைது

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஹவாலா தரகர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவர் மூலமாகத்தான் ரூ.10 கோடி கைமாறியதாக கூறப்படுகிறது. இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சென்னையில் டிடிவி தினகரனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நேற்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கைமாறிய வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் என்ற தரகர் டெல்லியில் கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டனர். குறுக்கு வழியில் இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.50 கோடி பேரம் பேசி, முதல்கட்டமாக சுகேஷுக்கு ரூ.1.30 கோடி கொடுக்கப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்பவரை டெல்லியில் போலீஸார் நேற்று கைது செய்தனர். தாய்லாந்தில் தலைமறைவாக இருந்த அவர், நேற்று டெல்லி திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளார். தினகரனுடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மூலமாக சென்னையில் இருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு ஹவாலா முறையில் ரூ.10 கோடி கொண்டு செல்லப்பட்டு, சுகேஷிடம் தரப்பட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. சங்கிலித் தொடர்போல அந்த பணம் கைமாறியுள்ளது. நரேஷையும் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது என்று டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தினகரன், மல்லிகார்ஜுனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் சஞ்சய் ஷெகாவத் தலைமையிலான போலீஸார் நேற்று 2-வது நாளாக தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர், ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் வசிக்கும் மோகனரங்கம் என்ற மோகன் வீட்டுக்கு டெல்லி போலீஸார் சென்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். மன்னார்குடியை சேர்ந்த அவர், வீட்டுவசதி வாரிய பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து, கொளப்பாக்கத்தில் பிலிப்ஸ் டேனியல் என்ற தனியார் தொலைதொடர்பு நிறுவன ஊழியரின் வீட்டுக்கு சென்று, அங்கு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவர்கள் இருவருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர், திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரத்தில் உள்ள வழக்கறிஞர் கோபிநாத் வீட்டுக்கு சென்றனர். கோபிநாத் இல்லாததால், அவரது தாய் காமாட்சியிடம் விசாரணை நடத்தினர். இதேபோல பாரிமுனையில் உள்ள ஒருவரது வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டுள் ளது.

கொச்சிக்கு செல்ல திட்டம்

நேற்றைய விசாரணையின்போது தினகரனை டெல்லி போலீஸார் உடன் அழைத்துச் செல்லவில்லை. அவர், ராஜ்பவனில் உள்ள மத்திய அரசு விடுதியில் போலீஸ் காவலுடன் தனி அறையில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவரையும், மல்லிகார்ஜுனாவையும் இன்று கொச்சிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

ஐபிஎஸ்கள், அமைச்சர்கள்

தினகரன் டெல்லி போலீஸ் வளையத்தில் சிக்கியபோது, தமிழகத்தை சேர்ந்த கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள 2 பேர், ஐஜி அந்தஸ்தில் உள்ள ஒருவர் என 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அவருக்கு உதவி செய்ய முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை தினகரனின் செல்போன் உரையாடல் மூலம் டெல்லி போலீஸார் உறுதி செய்துள்ளனர். அந்த 3 அதிகாரிகளிடமும் முதல்கட்ட விசாரணையைத் தொடங்க உள்ளனர். ஆனால், நிர்ப்பந்தத்தாலேயே உதவிசெய்ய முன்வந்ததாக அவர்கள் மூவரும் சக போலீஸ் அதிகாரிகளிடம் கூறிவருவதாக தெரிகிறது.

இதேபோல இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.50 கோடி திரட்ட தமிழக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சிலர் முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பட்டியலும் தயாராகி வருவதாக டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x