Published : 25 Dec 2013 08:22 PM
Last Updated : 25 Dec 2013 08:22 PM

மதுரை: ஜல்லிக்கட்டு நேரத்தை நீட்டிக்க முடியாது; மாவட்ட ஆட்சியர் மறுப்பு

ஜல்லிக்கட்டு நடத்தும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கிராமக் கமிட்டியினரின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நிராகரித்தனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜன. 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இல. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாலகிருஷ்ணணன், மாவட்ட வருவாய் அலுவலர் லோ.சிற்றரசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால்சாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சாந்தி) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் 2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஒழுங்குபடுத்துதல் சட்டப்படி என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும், எதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்ற விவரங்களை ஆட்சியர் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்டுச் சொல்லி, அவர்களுக்குரிய பணிகளை ஒப்படைத்த ஆட்சியர் அதை சரிவர செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

பெரிய அளவில் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் ரூ.5 லட்சம் முன்வைப்புத் தொகையும், சிறிய அளவில் நடத்துபவர்கள் ரூ.2 லட்சம் முன்வைப்புத் தொகையும் மாவட்ட ஆட்சியரின் பெயரில் டி.டி. அல்லது காசோலையாக வழங்க வேண்டும். காளைகள் பார்வையாளர்கள் மாடத்துக்குள் புகாதவாறு, 8 அடி உயரத்தில் இரட்டைத் தடுப்பு அமைக்க வேண்டும். பார்வையாளர் மாடத்தின் உறுதித்தன்மையை பொதுப் பணித் துறையினர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். அதற்கேற்ப ஒரு நாளுக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அதிகாரிகளின் ஆய்வுக்கு கிராமக் கமிட்டியினர் ஏற்பாடு செய்ய வேண்டும். பதிவு செய்த காளைகள், வீரர்களைத் தவிர மற்றவர்களை களம் இறக்கக் கூடாது. மாடுகளைத் துன்புறுத்தக்கூடாது.

பார்வையாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு போதிய அளவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு உரிய இடவசதி செய்து தர வேண்டும். தேவையற்ற பிளக்ஸ் போர்டுகளை வைக்கக் கூடாது என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கிராமக் கமிட்டியினர், போட்டி நடத்தும் நேரம் தற்போது காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரையாக இருக்கிறது. வெளியூரில் இருந்து அதிகளவில் காளைகள் வருவதால், இந்த நேரத்தை நீட்டித்துத் தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் இருப்பதால், நேரத்தை நீட்டிப்பு செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x