Published : 06 Jun 2016 02:31 PM
Last Updated : 06 Jun 2016 02:31 PM

மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி விளக்கம்

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்காத் திட்டத்துக்கான திமுக முயற்சிக்கு அதிமுக உரிமை கொண்டாடுவதாக ஜெயலலிதாவுக்கு கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கான தனது கோரிக்கையை ஏற்று அனுமதி அளித்த பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து, கடிதம் எழுதியதாக ஒரு செய்தி வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு விரைவில் அனுமதி அளிக்குமாறு, 3-6-2014 அன்றும் 7-8-2015 அன்றும் பிரதமரிடம் ஜெயலலிதா அளித்த கோரிக்கையின்படி அனுமதி வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 3-6-2014 அன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கையை, பிரதமர் 3-6-2016-ல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா, "சென்னை மாநகர மக்களுக்கு மெட்ரோ ரயில் உட்பட பல்வேறு வடிவிலான போக்குவரத்து வசதி களையும் மேம்படுத்தும் எண்ணத்தை எனது அரசு கொண்டுள்ளது" என்றும், "சென்னை மெட்ரோரயில் சேவையை கடந்த ஆண்டு ஜுன் மாதம் 29ஆம் தேதியன்று நான் தொடங்கி வைத்ததை தாங்கள் அறிவீர்கள்" என்றும்,

"சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை உருவாக்குவது என்ற கருத்துரு கடந்த 2003-ஆம் ஆண்டிலேயே உருவானது" என்றும் எழுதியிருக்கிறார்.

தி.மு. கழக அரசு 2006-ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தான் சென்னையில் "மெட்ரோரயில்" திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. விரைவான, நம்பத்தக்க, வசதியான, திறன்மிக்க, நவீன மற்றும் சிக்கனமான பொது போக்குவரத்து அமைப்பாகவும், பெருகி வரும் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஒரு நீண்ட காலத் தீர்வாகவும் அமைந்த இத்திட்டம் குறித்து, ஒரு விரிவான திட்ட அறிக்கையினைத் தயாரிக்கக் கழக அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து, இந்தப் பணி "டெல்லி மெட்ரோ இரயில்" கழகத்திடம் அளிக்கப்பட்டது.

இத்திட்டம் என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் "சிறப்பு முயற்சித்" திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இத்திட்டம் துணை முதலமைச்சராக இருந்த தம்பி ஸ்டாலின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது.

விரிவான திட்ட அறிக்கை 1-11-2007-ல் கிடைக்கப் பெற்று 7-11-2007 அன்று தமிழக அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டத்தை நிறைவேற்றுவதற்காக "சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்" என்கிற சிறப்பு வகை பொதுத் துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி, இந்தியக் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 3-12-2007 அன்று பதிவு செய்தது.

இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ. 14,600 கோடி. திட்டச் செலவில் 59 சதவிகிதம் ஜப்பான் அரசின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவி மூலம் மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டு, கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே 21-11-2008 அன்று டோக்கியோ நகரில் கையெழுத்தானது.

திட்டச் செலவில் 15 சதவீதத்தை மத்திய அரசு பங்குத் தொகையாகவும், 5 சதவீதத்தைக் கடனாகவும் வழங்கிடவும், மாநில அரசின் பங்கு 15 சதவிகிதம் மற்றும் 5.78 சதவிகித சார்நிலைக் கடனாகவும் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 28-1-2009 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த மெட்ரோரயில் திட்டம் 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித் தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இவ்வாறு முனைப்போடு முயற்சித்து தொடங்கப்பட்ட திட்டம் தான் "மெட்ரோ ரயில்" திட்டம். ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இதைப் பற்றி என்ன வெல்லாம் பேசினார்கள் என்று நினைவிருக்கிறதா?

2011ஆம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று படித்த ஆளுநர் அறிக்கையிலேயே "சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட மோனோ ரயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.

முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவு படுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க "மோனோரயில்" திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என்று அறிவித்தார்.

அதற்குப் பிறகு 4-8-2011 அன்று படித்த நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "மோனோரயில்" திட்டத்தை விரைவில் தொடங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்றார்.

மீண்டும் 30-1-2012 அன்று ஆளுநர் உரையில்" மோனோரயில் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப் புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்" என்று சொன்னார். அதன் பிறகு 26-3-2012 அன்று படித்த நிதி நிலை அறிக்கையில் மோனோரயில் 4 வழித் தடங்களில் இயங்கும் என்றும், எந்தெந்த வழித் தடங்கள் என்றும் விரிவாகப் படித்தார்.

அதன் பிறகு 16-6-2012 நாளிதழ் ஒன்றில் 34 இடங்களில் மோனோ ரயில் நிலையங்கள் என்றும், அமைச்சர் தலைமையில் 2 மணி நேரத்திற்கு மேல் லோசனை என்றும் செய்தி வந்தது.

தி.மு.கழக ஆட்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் கொண்டு வரப்பட்ட "மெட்ரோ"ரயில் திட்டத்தினை ஏற்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் வழக்கமான காழ்ப்புணர்ச்சி காரணமாக அறிவிக்கப்பட்ட போட்டித் திட்டம் தான் "மோனோ"ரயில் திட்டம்.

ஆனால் அந்தத் திட்டம் நடைமுறைக்கு உகந்ததல்ல என்பதை பின்னர் உணர்ந்து கொண்ட அ.தி.மு.க. அரசு மெட்ரோரயில் திட்டத்தை ஏற்றுக் கொண்டது என்பது தான் உண்மை.

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா மெட்ரோரயில் சேவையை உருவாக்குவது என்ற கருத்துரு, அவருடைய ஆட்சிக் காலத்திலேயே உருவானது என்பதைப் போல பிரதமருக்கு எழுதிய தனது கடிதத்திலே செயற்கையாகப் பெருமை தேடிக் கொண்டிருக்கிறார்.

தற்போது பிரதமர் அறிவித்திருப்பது மெட்ரோரயில் விரிவாக்கத் திட்டத்துக்கான ஒப்புதல். இந்த விரிவாக்கமும், தனது ஆட்சிக்காலத்தில் உருவான திட்டம் என்பதைப் போல முதலமைச்சர் ஜெயலலிதா கூறுவதாவது உண்மையா?

21-1-2009 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மேதகு ஆளுநர் அவர்கள் சட்டப் பேரவையில் படித்த அறிக்கையில், பத்தி 38இல், “சென்னை மாநகர மக்களின் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்திட, சாலைகளில் அதிகரித்து வரும் நெரிசலைக் குறைக்கக் கூடிய ரூபாய் 14,600 கோடி மதிப்பீட்டிலான "மெட்ரோரயில்" திட்டம் பொதுத் துறை மூலமாகவே செயல்படுத்தப்படும்.

மேலும் இந்தத் திட்டத்தில் திருவொற்றியூரும் இணைக்கப் பட வேண்டும் என்ற அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், இதற்கான விரிவான ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித் திருப்பதிலிருந்தே, விரிவாக்கத் திட்டத்திற்கான ஆய்வும் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து அந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலும் பத்தி 72இல் "ஆளுநர் உரையில் அறிவித்தவாறே இத்திட்டத்தில் திருவொற்றியூர் இணைக்கப்படுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்ல; 2011ஆம் ஆண்டு பேரவையில் படிக்கப்பட்ட ஆளுநர் உரை பத்தி 21இல், "14,600 கோடி ரூபாய்ச் செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜப்பான நாட்டு நிதி உதவியுடனும், அரசு நிதி உதவியுடனும் சென்னை மெட்ரோரயில் திட்டம் அனுமதிக்கப்பட்டு மிக விரைவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இந்த மெட்ரோரயில் இணைப்பு ரூ. 3001 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும் தொடர்ந்து நிதி உதவிகளை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து சென்னை மெட்ரோரயில் திட்டத்திற்கும் சரி, அதன் விரிவாக்கத் திட்டத்திற்கும் சரி, முதன் முதலில் முயற்சி எடுத்துக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்பதையும், முதலில் "மோனோ"ரயில் திட்டம் தான் சிறந்தது என்று ஏட்டிக்குப் போட்டியாகக் கூறி வந்த ஜெயலலிதா பின்னர் தன்னைத் திருத்திக் கொண்டு மெட்ரோரயில் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தார் என்பதையும், கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட முயற்சிக்குத் தான் தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது என்பதையும் ஜெயலலிதாவும் மற்றவர்களும் புரிந்து கொண்டால் சரி!

எப்படியோ கழக ஆட்சியில் மேற்கொண்ட விரிவாக்கத் திட்டம் சம்பந்தமான முயற்சிக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்திருப்பது, அந்தத் திட்டத்திற்காக முதலில் முயற்சி மேற்கொண்டவன் என்ற முறையில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் சென்னை மாநகர மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x