Published : 01 Jun 2016 08:01 AM
Last Updated : 01 Jun 2016 08:01 AM

பள்ளி அருகில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பதை தடுக்க கோரிக்கை

பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று புகையிலைக்கு எதிரான குழந்தைகள் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.

இது குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் செயல் இயக்குநர் எஸ்.சிரில் அலெக்ஸாண்டர் கூறியதாவது:

மே-31-ம் தேதி உலக புகையிலை தின எதிர்ப்பு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள 22 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தோம். அனைத்து கடைகளிலும் புகையிலைப் பொருட்கள் மாணவர்களுக்கு தடையேதுமின்றி விற்கப்படுவதை கண்டறிந்தோம். புகைபிடிப்பது சட்டப்படி குற்றம் என்கிற அறிவிப்புப் பலகை 88 சதவீத கடைகளில் வைக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் புகையிலை பழக்கத்துக்கு எளிதில் அடிமையாகும் நிலை உருவாகிறது. தமிழக அரசு பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இச்சந்திப்பின்போது, குளோபல் கேன்சர் நிறுவனத்தின் தமிழக பிரிவு துணை இயக்குநர் தினேஷ்குமார், டிசிஎஸ் நிறுவன மனித ஆற்றல் மேம்பாட்டு அலுவலர் டேனியல், ரெஜினா, பிரேமா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x