Published : 26 Mar 2014 10:54 AM
Last Updated : 26 Mar 2014 10:54 AM

மணல் விற்பனை: பொதுமக்கள் புகார்

பொதுப்பணித்துறை வழங்கியுள்ள அனுமதியை, ஒப்பந்ததாரர் முறைகேடாகப் பயன்படுத்தி, மணல் விற்பனை செய்வதாக, நேமம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் உள்ளன. இந்நிலையில், மழைக்காலத்தில் மழை நீரைச் சேமித்து வைப்பதற்காக, பூந்தமல்லி அடுத்த நேமம் ஏரியை சீரமைக்க பொதுப்பணித்துறை தீர்மானித்துள்ளது. இந்த ஏரியில் ஒரு டி.எம்.சி., அளவு நீரை சேமித்து வைப்பதற்காக, ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது, “நேமம் ஏரியை சீரமைக்க ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர், கரைகளை பலப்படுத்துவதற்காக மணல் எடுப்பதாகக் கூறி, அந்த மணலை அருகில் உள்ள யார்டில் சேமித்து வைத்து விற்பனை செய்கிறார். ஒரு யூனிட் மணல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு, தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

மணல் அள்ளப்படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட கனிமவள அதிகாரிகளிடம், பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றனர்.

ஆட்சியர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x