Last Updated : 21 Jun, 2016 03:16 PM

 

Published : 21 Jun 2016 03:16 PM
Last Updated : 21 Jun 2016 03:16 PM

புதுச்சேரியில் யோகா தின நிகழ்ச்சியில் கிரண் பேடி பங்கேற்பு; நாராயணசாமி புறக்கணிப்பு

உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் யோகா செய்தார்.

அதே நேரத்தில் இவ்விழாவில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆய்வுக்கூட்டத்துக்காக திடீர் பயணமாக அவர்கள் ஏனாம் சென்றுள்ளனர். நாளை டெல்லி சென்று மோடியை சந்திக்கின்றனர்.

யோகாசனத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் உளளவர்கள் அறிய வேண்டும் என பிரதமர் மோடி மேற்கொண்ட தீவிர முயற்சியால் ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. இதன்படி கடந்த 2 ஆண்டுகளாக உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரி கடற்கரையில் உலக யோகா தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு 34 பள்ளிகளைச் சேர்ந்த 4500 மாணவர்கள், 15 கல்லூரிகளைச் சேர்ந்த 700 மாணவர்கள், இளைய, மூத்த தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 800 மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று யோகாசன செயல்விளக்கம் மேற்கொண்டனர். அதில் கிரண்பேடியும் பங்கேற்றார்.

இதுகுறித்து ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், "யோகாசனம் மூலம் சிறுவர், சிறுமியருக்கு நல்ல உடல்வலிமை, ஆரோக்கியம் கிடைக்கும். சிறுவயதில் யோகா செய்தால் வயதான காலத்திலும் வலிமையுடன் திகழலாம். நானும் நாள்தோறும் யோகாசனம் செய்து வருவதால் உடல் நிலை சிறப்பாக உள்ளது" என்றார்.

யோகாசான நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்பார்கள் என்று அரசு அழைப்பிதழில் இருந்தது.

இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் வளர்ச்சி திட்ட ஆய்வுக்காக முதல்வர், அமைச்சர்கள் ஏனாம் சென்றுள்ளனர். அவர்கள் இன்று ஆய்வுக்கூட்டத்தை நடத்துகின்றனர். அங்கிருந்து மாலையில் டெல்லி செல்கின்றனர். நாளை பிரதமர் மோடியையும், அடுத்த நாள் மத்திய அமைச்சர்களையும் சந்திக்கின்றனர். புதுச்சேரிக்கு கூடுதல் நிதி பெறவும், முக்கிய பிரச்சினைகளை தெரிவிக்கவும் அவர்கள் சென்றுள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.

அதேநேரத்தில் ஆளுநர் கிரண்பேடியுடன் முதல்வர் நாராயணசாமி அரசு விழாக்களில் பங்கேற்பதை தவிர்ப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.ரத்ததானம் செய்தோரை கவுரவிக்கும் முதல் அரசு விழாவில் நாராயணசாமி பங்கேற்கவில்லை. தற்போது 2வது விழாவான யோகா தின விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "யோகா தினத்தில் அரசியல் வேண்டாம். நான் எனது பணியை செய்கிறேன். அதை எவ்வாறு செய்வது என்பதில்தான் எனது கவனமுள்ளது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x