Published : 03 Jun 2017 05:20 PM
Last Updated : 03 Jun 2017 05:20 PM

3 பிள்ளைகளை காப்பாற்ற யானை வயிற்றடியில் கிடந்து போராடினோம்: காட்டுயானையிடம் 12 வயது மகளைப் பறிகொடுத்த பெற்றோரின் திகில் அனுபவம்

இந்த சின்ன சந்துக்குள் யானை நுழைய முடியுமா? அதை மீறி கஷ்டப்பட்டு நுழைந்தால் வயிற்றின் இருபுறமும் சுவற்றில் உராயும். தலைக்கு மேலே கைதூக்கினால் எட்டும் உயரத்தில் உள்ள சிமெண்ட் சீட் பந்தல் முதுகை முட்டி சிராய்த்து விடும். யானையாக இருந்தால் குனிந்துதான் செல்ல முடியும். போதாக்குறைக்கு சுற்றுப்புறத்தில் இதேமாதிரியான நெருக்கடியில் சுற்றுப் பகுதியில் ஏராளமான வீடுகள். இதையெல்லாம் மீறித்தான் காயத்ரி என்ற 12 வயது சிறுமியை மிதித்து கொன்றிருக்கிறது கோவையில் வெள்ளியன்று பிடிக்கப்பட்ட காட்டுயானை.

நகருக்குள் புகுந்து 3 மணி நேரத்தில் 4 பேரைக் கொன்றது இந்த யானை என்றாலும் வீட்டின் முற்றத்தில், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை அவள் பெற்றோரை தூக்கி வீசி விட்டு அவர்கள் கண் எதிரே காட்டு யானை மிதித்துக் கொன்றது என்பது யாராலும் ஜீரணிக்க முடியாத விஷயம் மட்டுமல்ல, ரத்தம் உறைய வைக்கிற விஷயமும் கூட. 17 ஆண்டுகளுக்கு முன்பு கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற சேலம் தம்பதியர்களின் 9 வயது மகளை அவள் கண்எதிரே மிதித்துக் கொன்றது. அதற்கு பின் நடந்த மிகப்பெரும் துயர சம்பவம் இது.

(விஜயகுமார் - தங்கமணியின் வீடு)

முந்தைய சம்பவம் காட்டுக்குள் நடந்தது. இது மாநகராட்சிப் பகுதியில் உள்ள வீட்டுக்குள் நடந்துள்ளது. அதையெல்லாம் இந்த சம்பவம் நடந்த இடத்தை பார்வையிடப் போகிறவர்கள் எல்லாமே அதிர்ந்து போகிறார்கள். அந்த அளவுக்கு கோவை கணேசபுரத்தில், மூரண்டம்மன் கோயில் வீதி சந்தில் சிறுமியின் பெற்றோர் விஜயகுமார்- தங்கமணி வசித்து வந்த வீட்டின், சூழலும் ஏற்படுத்தி விடுகிறது.

வெறும் 9க்கு 10 அடி அகல நீளமுள்ள குருவிக்கூடுகள் மாதிரி தனித்தனியாக 2 ஒற்றை அறைகள். அதில் ஓர் அறையில் விஜயகுமார்- தங்கமணி மற்றும் அவரின் காயத்ரி உள்ளிட்ட குழந்தைகள் 3பேர் வசிக்கின்றனர். பக்கத்தில் உள்ள அடுத்த அறையில் விஜயகுமாரின் தம்பி அவரின் குழந்தைகள் இருவர் வசித்து வந்துள்ளனர்.

இந்த இரண்டு அறைக்கு முன்புறம் 10க்கு 20 அடி அகல நீளத்தில் ஒரு பழைய சிமெண்ட் சீட் மற்றும் தடுக்கு, மரம் கலந்து வேய்ந்த தாழ்வாரம். இங்கே ஒரு இரும்புக் கட்டில் போடப்பட்டிருக்கிறது. இந்த கட்டிலுக்கும், வீட்டின் அறைகளுக்கும் இடையே 6 அடி இடைவெளியே இருக்கிறது. இந்த தாழ்வாரமும் 10 அடி உயரமே இருக்கிறது. வீதியிலிருந்து நீளும் சின்ன சந்திலிருந்து இந்த வீட்டிற்கு வந்தால் வீட்டிற்கு இடது புறத்தில் பெரிய சாக்கடை பள்ளம். வலது புறத்தில் அதை விட பெரிய நீரோடை. முன்னும், பின்னும் இதேபோல சிறு,சிறு கூரை வீடுகள். இதற்குள்தான் காட்டு யானை இரவு 3 மணிக்கு புகுந்திருக்கிறது. அதை காயத்திரியின் தாய் கண்ணீருடன் விவரிக்கும் போது யாருக்கும் மனதில் குடி கொள்ளும் வெவ்வேறு அதிர்வுகளை தவிர்க்க முடியாது.

''நாங்க எப்பவும் வெளியே படுக்க மாட்டோம். என் குழந்தைகளோட வீட்டுக்குள்ளேதான் படுத்துக்குவேன். என் வீட்டுக்காரரின் தங்கை பிரசவத்திற்கு வந்து குழந்தை பொறந்து 12 நாளாச்சு. அவரும், பிறந்த குழந்தையும் அங்கே படுக்கட்டும்னுதான், நானும் குழந்தைகளும் வெளியில் படுத்திருந்தோம்.

சின்னக்குழந்தைகள் ரெண்டும் கட்டில்ல என் கூடவும், பெரிய பொண்ணு காயத்ரி கட்டிலுக்கு அப்பால் இருந்த இடைவெளியில் கீழே அவ அப்பா கூடவும் படுத்திருந்தா. மணி எத்தனைன்னு தெரியலை. பெரிசா மூச்சுக்காத்து விழற மாதிரி சத்தம். எழுந்திருச்சுப் பார்த்தா, பெரிய தந்தத்தோட யானை. ஐயோன்னு அலறிட்டேன். குழந்தைகளை தாவி எடுக்கறதுக்குள்ளே கொம்புல என்னைத் தூக்கி ஒரே வீசு. நான் 10 அடி தொலைவில இருந்த பாத்ரூம்ல போய் விழுந்தேன்.

அப்படியே பதறியடிச்சுட்டு எந்திரிச்சேன். கீழே படுத்திட்டிருந்த எங்க வீட்டுக்காரரை தூக்கி வீச அவர் 20 அடிக்கு அந்தப்பக்கம் பள்ளத்துல போய் விழுந்துட்டார். அவரை தூக்கி வீசறதுக்கு முன்னாலேயே அவர் நான் கத்தற சத்தம் கேட்டு எழுந்துட்டார். அவர் காயத்ரியை தாவி எடுக்கப் போகும்போதுதான். அவளை கண்ணு முன்னாடி காலை வச்சு மிதிக்குது. அதே வேகத்துல அவரையும் தூக்கி வீசீட்டுது. நான் அப்படியே வந்து மத்த 2 குழந்தைகளையும் தாவி எடுத்துட்டு இந்தப் பக்கம் வர்றேன். என் வீட்டுக்காரர் பள்ளத்துல இருந்து எப்படியே தட்டுத்தடுமாறி வீட்டு வாசலுக்கு ஏறி வர்றார். யானை அங்கேயே நிற்குது. அவர் யானைக்கு அடியில புகுந்து வர்றார். காயத்ரியை அப்படியே எடுத்துட்டு அந்தப் பக்கம் போகும்போதே புள்ளை சுத்தமா நொறுங்கி உயிர் போயிடுச்சு!'' என்று சொல்லிவிட்டு உடைந்து அழுதார் தங்கமணி.

(காயத்ரி)

விஜயகுமார் பேசும்போது, ''அந்த நேரத்துல என்ன நடக்குதுன்னே தெரியலை. நான் பள்ளத்துக்குள்ளே விழுந்து எழுந்திருக்கிறேன். யானையும் பள்ளத்துல இறங்கிடுச்சு. அதையும் மீறி அதோட வயித்துக்கடியில புகுந்து ஓடி திண்ணையில் ஏறி காயத்ரியை எடுக்கிறேன். அப்பவே அவ நொறுங்கிப் போய் கிடந்தா. அப்பவும் அந்த யானை பள்ளத்துல இருந்து மறுபடி வீட்டுத்திண்டு மேல ஏறப்பார்க்குது.

காயத்ரியை தூக்கிட்டு சந்துல வெளியே வந்து சத்தம்போடவும், மக்களும் விரட்டவும் அது அந்தப்புறமா பள்ளத்துலயே ஓடியது. அப்புறம்தான் வெள்ளலூர்ல எண்ணி கால் மணிநேரத்துல 3 பேரை மிதிச்சிருக்கு. அரை மணி நேரத்துக்கு மேல யானை இங்கேயே இருந்தது. அது நெருக்கத்துலயும், அதோட வயித்துக்கடியிலும் கிடந்ததால் அதோட முழு உருவம் எங்களுக்கு தெரியவேயில்லை. கொம்புகளை வச்சும், கரிய உருவத்தை வச்சும், மூச்சு காற்றையும் வச்சுத்தான் யானைன்னே தெரிய முடிஞ்சுது. எங்க அப்பா, தாத்தா காலத்திலிருந்து இங்கேதான் குடியிருக்கோம். யானைன்னு ஒன்று இங்கே வந்ததில்லை. இப்ப மட்டும் வரும்ன்னு நாங்க நினைச்சு பார்க்க முடியுமா? இப்ப எங்க பிள்ளைய கொல்றதுக்குன்னே அது வந்தது போல இருக்கு!'' எனச் சொல்லி மருகினார்.

விஜயகுமாருக்கு யானை தூக்கி வீசியதில் இடது கை முறிந்திருக்கிறது. இவர் மனைவிக்கு வலது தொடையில் யானை தந்தம் குத்தி சிராய்த்ததில் நடக்கவே முடியவில்லை. இவர்கள் இருக்கும் வீடுள்ள இடம் விஜயகுமாரின் தாத்தா வெங்கடாசலத்திற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இலவசமாக கொடுத்தது. சுமார் 3 சென்ட் நிலம். வெங்கடாசலத்திற்கு 3 மகன்கள், 3 மகள்கள். இவர்கள் 6 பேருக்கும் திருமணம், குழந்தைகள் ஆனபின்பு இருந்த 3 சென்ட் இடத்தை 3 மகன்களுக்கும், தனக்கும் பிரித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இவர்கள் குடும்ப வகையில் மட்டும் இதுவரை 23 குடும்பங்கள் ஆகிவிட்டன. இவர்கள் எல்லோருக்குமே ஊர், ஊராக சென்று ஜோசியம் (கைரேகை) பார்ப்பதுதான் தொழில். பெரிதாக எந்த வருமானமும் இல்லை. அதனால் இருக்கிற இடத்திலேயே குருவிக்கூடுகள் மாதிரி கூரை வீடுகள் கட்டிக் கொண்டு குடியிருக்கிறார்கள். மிகக்குறுகலான, இட நெருக்கடியில் இருந்ததால்தான் உள்ளே நுழைந்த யானைக்கு வெளியிலே போக முடியவில்லை. அதனால் இங்கே நின்று கொண்டு திரும்பக்கூட முடியவில்லை. வெறும் 200 சதுர அடிக்குள் 3 குழந்தைகளுடன் இவர்கள் இருவரும் சமர் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. அதனால்தான் இந்த துன்பமே நேர்ந்திருக்கிறது என்கிறார்கள் சுற்றிலும் வசிக்கும் இவர்களின் உறவுக்காரர்கள்.

காயத்ரி இறந்ததற்கும், விஜயகுமார், தங்கமணி அடிபட்டதற்கும் அரசு சட்டப்படியான நஷ்ட ஈடு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்கள். அது இது போன்ற குடும்பங்களுக்கு ஆறுதல் தரலாமே ஒழிய நிரந்தர தீர்வை தரமுடியாது. மாறாக 60 - 70 ஆண்டுகளுக்கு முன்பு இலவச பட்டா வாங்கி குருவிக்கூடு மாதிரி வீடுகட்டிக் கொண்டு வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்புகளில் பல்கிப் பெருகியிருக்கும் குடும்பங்கள் எத்தகைய சூழ்நிலையில் வசிக்கிறார்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காட்டு யானை உருவில் மட்டுமல்ல; வேறு பல உருவங்களிலும் இப்படிப்பட்ட அபாயங்கள் நேரவே செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x