Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM

நாடாளுமன்றக் கூட்டணியை நிர்ணயிக்கும் ஏற்காடு ‘நோட்டா’!

நாட்டிலேயே ஏற்காடு இடைத் தேர்தலில் ‘யாருக்கும் ஓட்டு இல்லை’ என்பதை பதிவு செய்யும் ’நோட்டா’ பொத்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக நோட்டா ஓட்டுகள் அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஏற்காடு இடைத்தேர்தலின் வாக்குப் பதிவு எந்திரத்தில் நோட்டா பொத்தான் பொருத்தப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. இரு கட்சிகளுமே சுமார் 50 கோடி வரை பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த முறை நோட்டா அறிமுகத் தால் பணம் வாங்கியிருந்தாலும் - வாங்கவில்லை என்றாலும், ஏற்காடு தொகுதி மக்கள் யாருக்கும் பயம் இல்லாமல் நோட்டாவைப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஏற்காடு தொகுதியில் சில விவசாய சங்கங்களும் சேலத்தைச் சேர்ந்த சில மனித உரிமை அமைப்புகளும் இந்தத் தேர்தலில் நோட்டாவைப் பயன்படுத்த வேண்டும் என்று நேரிலும், மொபைல் போன் குறுந்தகவல்கள் மூலமாகவும் மக்களிடையே பிரச்சாரம் செய்தன. இதுவும் ஓரளவு பலன் அளிக்கக்கூடும்.

தவிர, ஏற்காடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் போட்டியிடவில்லை. இதனால், அந்தக் கட்சிகளின் கணிசமான தொண்டர்கள், அபிமானிகள் நோட்டாவை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

இவர்கள் தவிர, கடந்த காலத் தேர்தல்களின்போது நடந்த வன்முறை, அராஜகம், முறைகேடு, பணம் பட்டுவாடா போன்ற சீரழிவுகளால் படித்த இளைஞர்கள், நடுநிலையாளர்கள் என சுமார் 30 சதவீதம் பேர் நமது தேர்தல் முறையின் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அதனால், இத்தனைக் காலம் இவர்களின் ஓட்டுக்கள் பதிவாகாமல் இருந்தன. இவர்களுக்கும் கடந்த கால மனக்குமுறலை எல்லாம் கொட்டித் தீர்க்கும் வடிகாலாக அமைந்திருக்கிறது ஏற்காடு இடைத்தேர்தலின் நோட்டா பொத்தான்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலின் கூட்டணியை நிர்ணயிக்கும் அம்சமாக கூர்ந்து கவனிக்கப்படுகின்றன ஏற்காடு இடைத்தேர்தலின் நோட்டா ஓட்டுகள். இங்கு நோட்டா ஓட்டுப் பதிவைக் கிட்டத்தட்ட மக்களிடம் எடுக்கப்படும் கருத்துக் கணிப்பாகவே கருது கின்றன அரசியல் கட்சிகள்.

ஏற்காடு இடைத்தேர்தலுக்கு இரு நாட்கள் முன்னதாக கருணாநிதி ஓர் அறிக்கையை விடுத்திருந்தார். அதில், “ஏற்காடு இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிட வில்லை. அவர்களின் ஆதரவு கோரி நான் கடிதம் எழுதினேன். ஒரு சில கட்சிகள் அதற்கு பதில் எழுதவில்லை. மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் என்பார்கள்” என்று தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் ஓட்டு களை தி.மு.க-வுக்கு அளிக்கும்படி மறைமுகமாகக் கேட்டிருந்தார்.

ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டாவில் கணிசமான (சுமார் 20 - 30 சதவீதம்) ஓட்டுகள் பதிவானால் - தேர்தலில் போட்டியிடாத காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்டவைகளின் ஓட்டுகள் தி.மு.க-வுக்கு செல்லவில்லை என்று அர்த்தம். இதன் மூலம் அந்தக் கட்சித் தொண்டர்களின் மன ஓட்டத்தை தி.மு.க. அறிந்துக்கொண்டு அதற்கேற்ப நாடாளுமன்றக் கூட்டணி வியூகங்களை அமைக்கக்கூடும். மேலும் எதிர்க் கட்சிகளும் தத்தமது தொண்டர்களின் மன ஓட்டத்தையும் அறிந்துக்கொண்டு கூட்டணியை முடிவு செய்யலாம்.

அதே சமயம், நோட்டாவில் கணிசமான ஓட்டுகள் பதிவு ஆகாமல் – அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் தொண்டர்கள் அ.தி.மு.க-வுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்தனர் என்று கருதலாம். அதன் அடிப்படையில் நாடாளுமன்றக் கூட்டணி வியூகங்களை அதிமுக அமைக்கக்கூடும். இது அப்படியே திமுக-வுக்கும் பொருந்தும்.

மொத்தத்தில் ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா வசதி இந்தியத் தேர்தல் முறையின் மீது மக்களுக்கான மன ஓட்டத்தை அறிய உதவுவதுடன், கட்சிகளுக்கும் அடுத்த கூட்டணிக்கான முக்கிய முடிவுகளை எடுக்க உதவும் கருவியாகவும் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x