Published : 08 Jan 2017 01:12 PM
Last Updated : 08 Jan 2017 01:12 PM

ஜல்லிக்கட்டு முடிவுக்கு காத்திருக்கும் சேவல்கட்டு: கோவையில் தயாராக இருக்கும் ஒரு கிராமம்

கோவை - சிறுவாணி செல்லும் சாலையில் 15 கிமீ தொலைவில் ஆலாந்துறை அருகே உள்ளது நாதகவுண்டன்புதூர் கிராமம். கூத்தாடி மலை அடிவாரத்தை யொட்டி இருக்கும் இக்கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் நடக்கும் சேவல்கட்டு சிறப்பு வாய்ந்தது.

நூற்றுக்கணக்கான கிராமத்து விவசாயிகள் ஆண்டுதோறும் பொங்கலின்போது இந்த ஊருக்கு தன் வளர்ப்பு கட்டுச் சேவல்களைக் கொண்டுவந்து கத்தி கட்டி சண்டையிடச் செய்வது வழக்கம். அதில் வென்ற சேவல்காரருக்கு, தோற்றவர் தனது சேவலை கொடுத்துவிடுவது; கட்டிய பந்தயப் பணத்தை கொடுப்பது நடைமுறை. அடுத்தடுத்து வென்ற சேவலுக்கு தங்கக் காதணி, காலுக்கு தங்கக் கொலுசு போட்டு அழகு பார்ப்பதும் உண்டு.

இந்த சேவல் சண்டையை காண வும், பந்தயம் கட்டி விளையாடவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இந்த சேவல்கட்டில் 5 ஆயிரம் சேவல் கள் கூட பங்கேற்றுள்ளன. அடிக்கடி ஏற்பட்ட சட்டம்- ஒழுங்கு பிரச்சினையால் இவ்விளை யாட்டை தடை செய்திருக்கிறது அரசு. அதையும் மீறி போட்டிகள் நடந்துள்ளன. அது பிரச்சினையான பின்பு, 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போலவே உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று சேவல்கட்டு நடத்தியிருக்கின்றனர். 3 ஆண்டுகளாக நீதிமன்ற அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் தடையை மீறி சில இடங்களில் சேவல்கட்டு நடந்துள்ளது.

பாரம்பரிய விளையாட்டு

‘இது ஜல்லிக்கட்டு போல வீர விளையாட்டாக இல்லாவிட்டா லும் பாரம்பரிய விளையாட்டு. சண்டையிடும் சேவல்களை முன்வைத்து வேடிக்கை, கேளிக்கை யோடு விவசாயிகள் அறுவடைத் திருநாளை கொண்டாடுகின்றனர். இதற்கு தடை விதிக்கலாகாது’ என்று சேவல்கட்டுப் பிரியர்கள் வேண்டுகோள் விடுத்து வரு கின்றனர்.

இந்த சூழ்நிலையில், ‘ஜல்லிக் கட்டுக்கான முடிவைப் பார்த்து சேவல் கட்டு நடத்துவதை தீர் மானிப்போம்’ என்று ஊர்ப் பெரியவர்கள் தற்போது முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நாத கவுண்டன் புதூரை சேர்ந்த என்.என்.மரு தாசலம் கூறியதாவது:

தமிழகத்தில் அந்தக்காலத்தில் பொள்ளாச்சி புரவிபாளையம் ஜமீன் நடத்திய சேவல்கட்டுதான் மிகப் பெரியது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகம் முழுவதும் இருந்து பொங்கலுக்கு 10 ஆயிரம் சேவல்கள் வரும். 8 முதல் 10 நாட் களுக்கு நடக்கும் சேவல்கட்டுகளை பார்க்க ஆயிரக்கணக்கில் மக்கள் மாட்டுவண்டிகளில் வருவார்கள். சேவல்கட்டுக்கு விசேஷமானது எங்கள் ஊர். இங்கேயும் 4 நாள் விளையாட்டுக்கு 5 ஆயிரம் சேவல் வந்துள்ளன. நானும் 40 வருஷத்துக்கு மேலே சேவல்கட்டு ‘ஜாக்கி’யா இருக்கிறேன். காகம், கருப்பு வெள்ளை வல்லூறு, கோழிவல்லூறு, மயில்கறுப்பு, பச்சைக்கால் கறுப்பு, வெள்ளைக் கால் கறுப்பு, நூலான், கீரி, கருங்கீரி, செங்கீரின்னு நூற்றுக்கணக்கான சேவல் ரகங்களில் எதை எந்த நேரத்துல சண்டைக்கு விட்டால் வெற்றி பெறும் என ஒரு கணக்கு உள்ளது.

கட்டுச்சேவலை சண்டைக்கு விட்டு, அது அடிக்கிற வேகத்தை பார்த்து, தகுந்த விலை பேசு வார்கள். அது ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரத்துக்கும் விலை போகும். 10 சேவல், 15 சேவல்களை ஜெயிச்ச சேவல் இருந்தா லட்சக் கணக்கில் கூட விலை வைத்து வாங்குகிறார்கள். இது ஒரு விழாக் கால பொழுதுபோக்கு விளையாட்டு தான்.

நீதிமன்ற அனுமதிக்காக...

சேவல் காலில் கட்டியிருக்கும் கத்தி நம் கையில், சுற்றி நிற்பவர்கள் மீது படாமல் சேவலை கவனமாக பிடிப்பதில்தான் ‘ஜாக்கி’யோட திறமை இருக்கிறது. அதை சரியாக செய்யாவிட்டால் விபரீதம் ஆகிவிடும். அந்த பாதுகாப்பை எல்லாம் ஏற்பாடு செய்து விட்டுத்தான் அனுமதி கேட்கிறோம். ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டால் இதற்கும் அனுமதி கிடைப்பது சுலபம் என சொல்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாதகவுண்டன்புதூரை சுற்றி வந்தபோது, வீட்டுக்கு வீடு 5 சேவல், 6 சேவல் வைத்துள்ளனர். ஒருவர் 35 சேவல்களை வைத்துள்ளார். இந்த ஊரில் மட்டும் பொங்கலுக்காக 1000 சேவல்களுக்கு மேல் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர் சேவல்கட்டு பிரியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x