Published : 25 Mar 2014 10:05 AM
Last Updated : 25 Mar 2014 10:05 AM

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது: 10,38,876 மாணவ - மாணவிகள் எழுதுகிறார்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு புதன்கிழமை (நாளை) தொடங்குகிறது. 3,179 மையங்களில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் திங்கள் கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 26-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது காலை 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறையில் மாணவ-மாணவிகள் மனஇறுக்கத்தைப் போக்கி விடைகளை திட்டமிட்டு நல்ல முறையில் எழுத வசதியாக அதை முழுமையாக படித்துப் பார்க்க 10 நிமிடம் (9.15 மணி முதல் 9.25 மணி வரை) வழங்கப்படும்.

புதிய நடைமுறை அறிமுகம்

விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட முகப்பு படிவத்தில் அச்சிடப்பட்ட தேர்வர்களின் புகைப்படம், பதிவு எண் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள 5 நிமிடம் (9.25 மணி முதல் 9.30 மணி வரை) அளிக்கப்படும்.

விடைத்தாள் வழங்கிய பின்னர், விடைத்தாளில் பூர்த்தி செய்ய வேண்டிய தேர்வரின் பதிவுஎண் உள்ளிட்ட விவரங்களை பதற்றத்தின் காரண மாக தேர்வர்கள் தவறாக பதிவு செய்வதால் தேர்வு முடிவுகள் வெளி யிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட முகப்பு சீட்டு விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட்டால் போதும்.

விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு

முதன்மை விடைத்தாளில் பக்கங் களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும்.

10,38,876 மாணவர்கள் பங்கேற்பு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11,552 பள்ளி களைச் சேர்ந்த 10,38,876 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 5,30,462. மாணவிகள் 5,08,414 பேர். சென்னை மாநகரில் 588 பள்ளிகளில் இருந்து 56,556 பேர் 207 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 27,943 பேர் மாணவர்கள், 28,613 பேர் மாணவிகள். இதேபோல், புதுச்சேரியில் 46 மையங்களில் 18,509 பேர் தேர்வில் கலந்துகொள்கிறார்கள்.

ஜெனரேட்டர் வசதி

தேர்வில், கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல் வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. எனினும், ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யவும் தேர்வு மைய பொறுப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x