Published : 05 Sep 2016 11:33 AM
Last Updated : 05 Sep 2016 11:33 AM

9 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்ற கடை ஊழியர்: ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை

அயனாவரத்தில் 9 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்ற ஊழியரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6-வது தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோபாராம் வசிக்கிறார். வீட்டின் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், தரைத் தளத்தில் தங்க நகைக் கடையை நடத்தி வருகிறார். நகைக் கடையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் கோபாராமின் வீட்டிலேயே தங்கி இருந்தார். தீபக் மற்றும் கோபா ராமின் 2 மகன்கள் நகை விற்பனையை கவனித்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் கோபாராம் ஓட்டேரியில் உள்ள ஜெயின் கோயிலுக்கு கடையை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென் றார். அப்போது தீபக்கையும் அழைத்தார். ஆனால் தீபக், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வீட்டிலேயே இருந்து விட்டார்.

மாலையில் கோபாராம் திரும்பி வந்தபோது தீபக் வீட்டில் இல்லை. நண்பர்களின் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து இருந்தார். நேற்று காலையில் கோபாராம் கடையை திறந்தபோது கடையில் இருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் 9 கிலோ நகைகளை காணவில்லை. லாக்கரில் இருந்த ரூ.2 லட்சமும் திருடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கோபாராம், தீபக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. அவர் தான் நகை, பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது.

இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் கோபாராம் புகார் செய்தார். போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். கடை ஊழியர் தீபக் கோபாராமின் நெருங்கிய நண்பரின் மகன். கடந்த 3 ஆண்டுகளாக கடையில் வேலை செய்திருக்கிறார். இதனால் தீபக்கை தனது வீட்டிலேயே தங்க வைத்திருந்தார். கோபாராம் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றதும், வீட்டில் இருந்த சாவியை எடுத்து கடையை திறந்து, திருட்டு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார் தீபக். திருட்டுக்கு தீபக்கின் நண்பர் ஒருவரும் உதவி செய்திருக்கிறார். கடையில் இருந்து 2 பேர் சென்றதை அருகில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.

கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அதன் காட்சிப் பதிவுகள் இருக்கும் டிஸ்க் ஆகியவற்றையும் தீபக் எடுத்துச் சென்றுவிட்டார். தீபக்கின் சொந்த ஊர் ராஜஸ்தான் என்பதால் அவர் நண்பருடன் அங்கு சென்றி ருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x