Published : 09 Jan 2017 08:49 AM
Last Updated : 09 Jan 2017 08:49 AM

டெபிட் கார்டு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: பணமில்லா பரிவர்த்தனைக்கு ஊக்கத்தொகை - மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஊக்கப் பரிசுகளை வழங்குவதன் மூலம்தான் மின்னணு பரிமாற் றத்தை அதிகரிக்க முடியும் என்பதால், அதற்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் 1000, 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்வதாக அறிவித்து 2 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், பணத் தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற் கான உச்சவரம்பு ரூ.2,500-ல் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. ஆனால் ரூ.500 தட்டுப்பாடு காரணமாக ரூ.4,000 மட்டுமே, அதுவும் திறந்திருக்கும் குறிப்பிட்ட சில ஏடிஎம்களில் எடுக்க முடிகிறது.

கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் மாதத்துக்கு 5 முறைக்கு கூடுதலாகவும், மற்ற வங்கிகளில் 3 முறைக்கு அதிகமாகவும் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.15 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புத்தாண்டு முதல் இக்கூடுதல் கட்டண முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு முன்பாக டெபிட் கார்டு களின் தன்மையைப் பொறுத்து ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை ஒரே தடவையில் எடுக்க முடியும். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் ஒரு முறைக்கு ரூ.10,000 வீதம் 3 முறை எடுக்க முடியும். அதாவது, ஒரு டெபிட் கார்டு மூலம் மாதத்துக்கு ரூ.1.55 லட்சம் முதல் ரூ.2.80 லட்சம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியும். ஆனால், இப்போது ஒரு முறைக்கு ரூ.4,000 வீதம் மாதத்துக்கு ரூ.32,000 மட்டுமே எடுக்க முடியும்.

ரிசர்வ் வங்கியின் உச்சவரம் புப்படி ஏடிஎம்களில் அனுமதிக்கப் பட்ட முறைகளில் எடுக்கப்படும் பணம் போதுமானதாக இருக்காது. இதற்கு காரணம் ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள்தானே தவிர, வாடிக்கையாளர்களின் தவறு அல்ல. எனவே, டெபிட் கார்டுகளின் கூடுதல் பயன்பாட்டுக்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

பணப் பரிமாற்றத்தைவிட பண மில்லா பரிமாற்றம் லாபமானது என மக்கள் நினைத்தால் அதற்கு மாறுவார்கள். எனவே, இருக்கும் கட்டமைப்பு வசதிக்கு ஏற்ப பணமில்லா பரிமாற்றம் நடக்க வசதியாக வாடிக்கையாளர் களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். மின்னணு பரிமாற்றத் தின் மூலம் செலுத்தப்படும் பணத் துக்கு 1 முதல் 2 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தால், அது பலரையும் பணமில்லா பரிவர்த்தனைக்கு அழைத்து வரும்.

எனவே, பரிமாற்றக் கட்டணங் களை ரத்து செய்து, ஊக்கப் பரிசுகளை வழங்குவதன் மூலம் தான் மின்னணு பரிமாற்றத்தை அதிகரிக்க முடியும் என்பதால், அதற்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x