Last Updated : 23 Feb, 2017 12:45 PM

 

Published : 23 Feb 2017 12:45 PM
Last Updated : 23 Feb 2017 12:45 PM

பன்றிக்காய்ச்சலுக்கு சுய மருத்துவம் எடுக்காதீர்கள்: சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

பன்றிக் காய்சல் பரவலைத் தடுக்க சுய சுகாதாரமே அவசியமானது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் கணிசமான எண்ணிக்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். | விரிவான செய்தி > >தமிழகத்தில் மீண்டும் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: இரண்டே மாதத்தில் 1,200 பேர் பாதிப்பு- சர்க்கரை நோயாளி, சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு எச்சரிக்கை |

மக்களிடையே பன்றிக் காய்ச்சல் பரவல் குறித்த சந்தேகங்களுக்கு அரசு சார்பில் எந்த அளவுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது? தமிழக அரசு பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க மேற்கொண்டுள்ள திட்டங்கள் குறித்து 'தி இந்து' இணையதள செய்திப் பிரிவுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி...

பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது, இதனை எதிர்கொள்ள தமிழக அரசு எம்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?

"பன்றிக் காய்ச்சல் என்பது பருவ காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் கூறிய போதிலும் தமிழ் நாட்டில் ஜனவரி முதல் ஆங்காங்கே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தொற்றுகள் ஏற்படும் என்று அறியப்பட்டது.

வெளியிலிருந்து வருபவர்களால் ஏற்படும் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டில் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நோய்த் தொற்றுகள் சுய சுகாதாரமின்மை காரணமாகவே ஏற்பட்டுள்ளது.

மேலும் குளிர் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சலாக பன்றிக் காய்ச்சல் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து, நோய்கள் எளிதில் தாக்கக் கூடிய முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சலால் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க சுகாதார நிலையங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நோய் பாதித்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறிவதற்காக 21 மருத்துவ மையங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.

மேலும் பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு வழங்க 13, 81,508 டாமி ப்ளூ மாத்திரைகள் உள்ளன. மேலும் 21,567 டாமி ப்ளூ சிரப் உள்ளது. 16, 461 மருத்துவ பாதுகாப்புக் கவசங்கள், 11,72,990 மூன்று அடுக்கு முகக் கவசங்களும் கையிருப்பில் உள்ளன.

டாமி ப்ளூ மாத்திரைகள் அந்தந்த மாவட்ட பொது சுகாதாரத் துறை இயக்குனர் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தும்மலின்போதும், இருமலின் போதும் மூக்கு மற்றும் வாயினை கைக்குட்டை கொண்டு மூடுதல், கைகளை சுத்தமாக சோப்புக் கொண்டு கழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகள் பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அறிய 24 மணி நேரமும் ஆலோசனை பெறும் வகையில் தகவல் மையம் ( தொலைப்பேசி எண்- 044- 24350496, 24334811, 9444340496, 9361482899) ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தகவலகள் பெற 108 எண்ணைப் பயன்படுத்தலாம் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்கள்

பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்டந்தோறும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில் நிலையங்கள், வழிப்பாட்டுத் தளங்கள், சந்தைகள், பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இவ் விழிப்புணர்வு முகாம்கள் மூலம், காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் தாங்களாகவே மருத்துகளை எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையையோ அல்லது உரிய மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் தனியார் மருத்துவர்கள் பன்றிக் காய்ச்சல் நோய் என சந்தேகிக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது உரிய வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளவாறு மட்டுமே பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று உள்ளவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சிகிச்சையை தாமதிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசின் தொடர் முயற்சியின் காரணமாக பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் நோய் விகிதாச்சாரம் குறைந்துள்ளது" என்றார்.

அரசாங்கம் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருந்தால் பலியை தவிர்த்து இருக்க முடியுமே? ஏன் அரசு அதனை செய்ய தவறியது?

"பன்றிக் காய்ச்சல் கொசுவினால் பரவும் வியாதியைப் போன்றது அல்ல. தனிபட்ட நபர்களின் சுய சுகாதாரம் சார்ந்தது. இந்த ஆண்டு இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

சாதாரண சளி, இருமல் போன்றுதான் பன்றிக் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் காணப்படுகின்றன. மருத்துவ சிகிச்சையை தாமதப்படுத்திய விளைவின் காரணாமாகத்தான் இந்த இறப்புகள் ஏற்பட்டுள்ளன. டெங்கு போன்று இந்த நோய் கிடையாது. ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்டவுடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம்.

பொது மக்களிடம் அரசு சார்பில் வைக்கப்பட்டும் ஒரே வேண்டுகோள் இதுதான். பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று ஏற்பட்டவுடன் சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனையையோ, தனியார் மருத்துவமனையையோ அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் எந்தவித பயவுணர்வும் இல்லாமல் மருத்துவர்களை அணுகலாம். பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x