Last Updated : 12 May, 2017 11:50 AM

 

Published : 12 May 2017 11:50 AM
Last Updated : 12 May 2017 11:50 AM

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிவு

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது. மொத்த சதவீதம் கடந்த ஆண்டை விட 1 %குறைந்துள்ளது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட 3.3 சதவீதம் சரிந்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு மார்ச்சில் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 7197 மாணவர்களும், 8386 மாணவிகளும் என மொத்தம் 15583 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளின் படி மொத்தம் 13508 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 5994 பேரும், மாணவிகளில் 7514 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 86.68 ஆகும்.

இது கடந்த ஆண்டை காட்டிலும் 1 சதவீதம் குறைவு.

இதில் புதுச்சேரி பகுதியில் கடந்த ஆண்டை காட்டிலும் 0.25 சதவீதமும் (87.83 சதவீதம்), காரைக்காலில் கடந்த ஆண்டை விட 5.42 சதவீதமும் (80.46 சதவீதம்) தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

அரசு பள்ளிகளில் பொருத்தவரை புதுச்சேரி, காரைக்காலில் 73.70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 3.3 சதவீதம் குறைவு. புதுச்சேரி பகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் 73.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 2.44 சதவீதம் குறைவு. அதேபோல் காரைக்கால் பகுதியில் 73.70 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 6.23 சதவீதம் குறைவு.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 200க்கு200 மதிப்பெண் 301 பேர் பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் படிப்போர் கிராமத்தினை சேர்ந்தவர்கள். அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். தோல்வியடைந்தோர் மனம் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அது வரவேற்க்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

பேட்டியின் போது கல்வியமைச்சர் கமலகண்ணன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x