Last Updated : 24 Mar, 2014 12:00 AM

 

Published : 24 Mar 2014 12:00 AM
Last Updated : 24 Mar 2014 12:00 AM

காரை வேகமாக ஓட்டி மானை கொன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கோட்டூர்புரத்தில் காரை வேகமாக ஓட்டி மானை கொன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னையில் பாரம்பரிய புகழ் பெற்ற பகுதிகளாக விளங்கும் அடையாறு, கிண்டி, ராஜ்பவன், வேளச்சேரி பகுதிகள் அனைத்தும் இணைந்து பெரிய காடாக இருந்தது. அந்த காட்டின் ஒரு பகுதிதான் ஐஐடி வளாகமாகவும், கிண்டி சிறுவர் பூங்காவாகவும் உள்ளன. ஐஐடி வளாகம், சிறுவர் பூங்கா உருவாக்கப்பட்டபோது அந்த பகுதிகளில் இருந்த மான்கள் ஏராளமாக வெளியேற ஆரம்பித்தன.

வெளியேறிய மான்கள் அனைத்தும் வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் ஆடு, மாடுகளைப்போல சுற்றி வருகின்றன. இந்த மான்களை நாய்கள் கூட்டமும், மனிதர்கள் கூட்டமும் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றன. சாலைகளில் திரியும் மான்களில் பல வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் பிர்லா கோளரங்கம் எதிரே சனிக்கிழமை இரவில் காரில் வேகமாக வந்தவர் ஒரு மான் மீது மோதி விட்டார்.

இதில் மானின் தலை மற்றும் உடலில் ரத்த காயம் ஏற்பட்டது. அது உயிருக்கு போராடியது. உடனே கூட்டம்கூட சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் காவலர்கள், கிண்டி வன அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அருகிலேயே இருந்த வன காவலர்கள் சில நிமிடங்களில் விரைந்து வந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மானுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மான் இறந்தது. மானை கார் ஏற்றிக் கொன்றதற்காக காரை ஓட்டி வந்த சைதாப்பேட்டையை சேர்ந்த மஞ்சுநாதா என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டி விட்டு காரை எடுத்து செல்லும்படி கூறிய வன அலுவலர்கள் அவரது காரை பறிமுதல் செய்தனர்.

வனத்துறை விளக்கம்

கிண்டி வன பகுதி கண்காணிப்பாளர் தனசேகரன் இதுபற்றி கூறுகையில், “சாலைகளிலும், மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் சுற்றித் திரியும் மான்களை மீட்க நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். நூற்றுக் கணக்கில் வெளியில் திரிந்த மான்கள் இனப்பெருக்கம் செய்து ஆயிரக் கணக்காக பெருகியுள்ளன. அந்த மான்களை பாதுகாக்கும் பொருட்டு அனைத்தையும் பிடித்து பாதுகாப்பான இடத்தில் விடுவதற்கு முடிவு செய்துள்ளோம். அடையாறு, கிண்டி, வேளச்சேரி, கோட்டூர்புரம், ராஜ்பவன் பகுதிகளில் மான்கள் ஏராளமாக சுற்றுகின்றன. இந்த பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் வேகமாக செல்லக் கூடாது. மான் எந்நேரமும் குறுக்கே வரலாம் என்பதால் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். வன விலங்குகளுக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தினாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x