Last Updated : 21 Mar, 2014 06:52 PM

 

Published : 21 Mar 2014 06:52 PM
Last Updated : 21 Mar 2014 06:52 PM

போலீஸ் சைக்கிள் ரோந்து மீண்டும் செயல்படுத்தப்படுமா? - சந்துகளிலும் கண்காணிக்கலாம்; திருடர்களை எளிதில் பிடிக்கலாம்

சைக்கிளில் போலீஸார் ரோந்து சென்றால் குற்றங்கள் குறையும் என்கின்றனர் பொதுமக்கள். சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

இரவு நேரத்தில் சைக்கிளில் ஒரு லத்தியை வைத்துக்கொண்டு போலீஸார் ரோந்து செல்லும் காட்சியை தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கலாம். காலம் மாற மாற காவல் துறையும் நவீனத்துக்கு மாறிவிட்டது. சென்னையில் தற்போது தினமும் இரவில் மட்டும் 88 காவல் குழுவினர் ரோந்து செல்கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு கார், 2 பைக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

குற்றம் நடக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லவும், குற்றவாளிகளை விரட்டிப் பிடிக்கவும் ரோந்து போலீஸாருக்கு காரும் பைக்கும் அவசியம் தேவை. ஆனால் குற்றவாளிகளுக்கு தப்பிக்கும் வாய்ப்பு கொடுக்காமல் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க கார், பைக்கைவிட சைக்கிள் அதிகம் உதவும்.

அலர்ட் ஆகும் திருடர்கள்

இரவு ரோந்து செல்லும்போது காவல் துறை வாகனம் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் ஒளிரும் லேசர் விளக்கும், சைரன் ஒலியும் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், குற்றவாளிகளுக்கு பய உணர்வையும் கொடுக்கிறது. ஆனால், போலீஸ் வாகனம் வருவதை தொலைவிலேயே அறிந்துகொள்ளும் சமூகவி

ரோதிகள் அலர்ட் ஆகிவிடுகின்றனர். ரோந்து வாகனம் அருகே வருவதற்குள் அவர்கள் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அது கடந்து சென்றதும் மீண்டும் தங்கள் வேலையை பயமில்லாமல் தொடர்வார்கள். அதே நேரம், சைக்கிளில் ரோந்து சென்றால், குற்றவாளிகள் சிக்குவதற்கு 99 சதவீதம் வரை வாய்ப்பிருக்கிறது.

முட்டுசந்திலும் போகலாம்

சைக்கிளில் ரோந்து சென்றால் பிரதான சாலைகள் மட்டுமின்றி குறுகலான தெருக்கள், சந்துகள், முட்டுசந்துகளில்கூட கடைசி வரை சென்று கண்காணிக்க முடியும். குப்பைத் தொட்டி மறைவில், மின்பெட்டிக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்களைக்கூட கண்டுபிடிக்க முடியும்.

வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டுகிறார்களா என்பதையும் சத்தத்தை வைத்து அறிந்துகொள்ளலாம். வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்பவர்கள், நிழல் அசைவுகள், மறைவாக நின்று பேசுபவர்களையும் ரோந்து போலீஸார் கவனமாகப் பார்க்க முடியும். மொத்தத்தில் குற்றவாளிகள் எளிதில் போலீஸ் கண்ணில் சிக்கிவிடுவார்கள். சைக்கிளில் போலீஸார் ரோந்து வருவது, அருகே வந்தபிறகுதான் தெரியும் என்பதால், திருடர்கள் அலர்ட்டாகி தப்பிப்பதும் கடினம்.

சைக்கிள் ரோந்து நிறுத்தம்

கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில காவல் நிலையங்களில் மட்டும் சில மாதங்களுக்கு முன்பு சைக்கிள் ரோந்து பணி மீண்டும் கொண்டுவரப்பட்டது. அதிகாரிகள் மாறியதும் இந்த நடைமுறையும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது ஐ.ஜி.யாக இருக்கும் பொன்.மாணிக்கவேல் பணிபுரிந்த அனைத்து இடங்களிலும் சைக்கிள் ரோந்து பணியை ஊக்கப்படுத்தினார். தற்போது சைக்கிள் ரோந்து பணியை ஊக்கப்படுத்த எந்த அதிகாரியும் தயாராக இல்லை. பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மீண்டும் சைக்கிள் ரோந்து அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x