Published : 07 Dec 2013 09:57 AM
Last Updated : 07 Dec 2013 09:57 AM

கோவை: பெண் கொலையில் வழக்கறிஞர் தம்பதி கைது

கோவையில் இரு கொலை வழக்குகளில் தேடப்பட்டுவந்த வழக்கறிஞர் தம்பதி, கேரள மாநி லத்தில் இருந்து வெள்ளிக்கிழமை கோவைக்கு அழைத்து வரப்பட்ட னர். இருவரும், அம்மாசை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மணிவேல் (45), சாய்பாபா காலனியைச் சேர்ந்த அம்மாசை (40) ஆகியோர் கொலை வழக்குகளில், வழக்கறிஞர் ராஜவேல் (45), அவரது மனைவி மோகனா (41) ஆகியோர் முக்கிய எதிரிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நிலத்தை அபகரிப்பதற்காக மணிவேலை கொலை செய்தது, மனைவி மோகனாவை, மோசடி வழக்கில் இருந்து தப்ப வைப்ப தற்காக, அம்மாசை என்ற பெண்ணைக் கொலை செய்து, மனைவி இறந்துவிட்டதாக, அம்மாசை சடலத்தைக் காட்டி ஊரை ஏமாற்றி யது ஆகிய குற்றங்களுக்காக, தலைமறைவான வழக்கறிஞர் தம்பதியை காவல் உதவி ஆணையர் கே.ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில், தம்பதியர் இருவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம், கோவளம் பகுதி யில் வியாழக்கிழமை பிடிபட்டனர். இருவரையும், போத்தனூர் காவல் ஆய்வாளர் கனகசபாபதி தலை மையிலான தனிப்படை போலீசார், கோவளத்தில் இருந்து கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு, வேன் மூலம் வெள்ளிக்கிழமை அழைத்து வந்தனர்.

வேனை விட்டு இறங்கிய இருவரும் தங்களது முகத்தை துணியால் மூடிக் கொண்டனர்.

2 பிரிவுகளில் வழக்கு

அம்மாசை கொலை வழக்கில் வழக்கறிஞர் ராஜவேல் - மோகனா தம்பதி மீது 302 (கொலை), 201 (தடயங்களையும், சாட்சியங்களையும் மறைத்தல்), ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

தம்பதியிடையே தகராறு

கோவளம் காவல் நிலையத்தில் இருந்த ராஜவேல், தன்னை அழைத்துச் செல்ல வந்த தனிப்படை காவல் அதிகாரிகளிடம், இக் குற்றங்களுக்கு மோகனாதான் முக்கியக் காரணம். மோகனாவின் பேராசைதான், என்னை இந்தளவுக்கு கொண்டு வந்து விட்டது. எனவே, என்னை விட்டுவிடுங்கள், அவளைக் கூட்டிச் செல்லுங்கள் எனத் தெரிவித்தாராம்.

கண்ணீர் சிந்திய ராஜவேல்

வழக்கறிஞர் தம்பதியை, கோவளத்தில் இருந்து கோவைக்கு தனிப்படை போலீசார் வேன் மூலம் வெள்ளிக்கிழமை அழைத்து வந்த னர். பயணத்தின்போது கண்ணீர் சிந்தியபடி ராஜவேல் வந்துள்ளார். நான் செய்து இருக்கக்கூடாது என்று அவ்வப்போது புலம்பியபடி இருந்துள்ளார். ஆனால், மோகனா, எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் இருந்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

எனக்கு இவர் வேண்டாம் - மோகனா

புலம்பியபடி கண்ணீர் சிந்திய ராஜவேலை பார்த்து, ‘அழாதீர்கள், நடந்துவிட்டது, என்ன செய்ய முடியும், இனி நடக்கப் போறதைப் பார்ப்போம் என்று மோகனா ஆறுதலாகவும், மிரட்டலாகவும், ராஜவேலிடம் கூறியுள்ளார்.

இதனிடையே, அவ்வப்போது, ‘எனக்கு இவர் வேண்டாம், விவாகரத்து செய்து விடுகிறேன்’ என மோகனாவும் சத்தமாகக் கூறியதாக, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

மயங்கி விழுந்த ராஜவேல்

ராஜவேலுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு இரு சிறுநீரகங்களும் பழுதடைந்தன. இதனால், சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்து கொண்டார். சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் வழக்குத் தொடர்பாக விசாரித்துவிட்டு காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தலாம் என போலீசார் முடிவெடுத்திருந்தனர்.

இதனிடையே, காவல் நிலையத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜவேல், திடீரென மயங்கி கீழே விழுந்தார். சர்க்கரை நோய் காரணமாக சோர்வடைந்திருந்த அவருக்கு, டீ கொடுத்து அமரவைத்தனர். இதையடுத்து, அவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

ராஜவேல் சோர்வாகக் காணப்பட்டதால், அவரிடம் விசாரணை ஏதும் நடத்தாமல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மணிவேல் கொலை வழக்கு, நஞ்சுண்டாபுரம் விசாலாட்சி மாயமான வழக்குகளில் அவரை பின்னர் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.

ராஜவேலும், மோகனாவும் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, எம்.எல்.எம். மோசடி வழக்குத் தொடர்பாக, மோகனாவை ஒடிசா போலீசார் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க அழைத்துச் செல்ல உள்ளனர்.

எப்பப்பா வருவீங்க?

ராஜவேல் - மோகனா தம்பதிக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் 10-ம் வகுப்பு, 2-வது மகன் 3-ம் வகுப்பு, மகள், எல்.கே.ஜி. படிக்கின்றனர்.

வழக்கறிஞர் தம்பதியினர், கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் 2-வது மகனும், மகளும் இருந்தனர்.

தம்பதியினரை கைது செய்து அழைத்து வந்தபோது, அவர்களின் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். அப்போது, காவல் நிலையம் வரும் முன்பாக, கோவையில் உள்ள ஒரு இடத்தில் அவர்கள் உறவினர் ஒருவரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டனர்.

அப்போது, காரை வீட்டு கீழே இறங்கிய அவர்களின் 3 வயது மகள், ‘எப்பப்பா வருவீங்க?’ என்று கேட்டதும் ராஜவேல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x