Published : 05 Sep 2015 02:46 PM
Last Updated : 05 Sep 2015 02:46 PM

உலக முதலீட்டாளர்கள் மாநாடு விளம்பரத்திற்காகவே நடத்தப்படுகிறது: ராமதாஸ்

எந்த பயனும் ஏற்படுத்தாத உலக முதலீட்டாளர் மாநாட்டிற்காக பல நூறு கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இம்மாநாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால், அதைவிட அதிக முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அரசே செய்திகளை கசிய விடுகிறது.இவை அனைத்தும் வெற்று முழக்கங்கள்.... மக்களை ஏமாற்றுவதற்கான நாடகங்கள் என்பதைத் தான் கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.46,602 கோடி தொழில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கமணி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் எந்தெந்த நிறுவனங்கள் எங்கெங்கு என்னென்ன தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன? அவற்றில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி பாமக வலியுறுத்தி இருந்தது. ஆனால், இன்று வரையில் தமிழக அரசிடமிருந்து இந்த வினாவிற்கு பதில் வரவில்லை.

உண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் தமிழகத்தில் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீட்டின் மதிப்பு ரூ.29,558 கோடி மட்டும் தான். இதில் கூட ரூ.10,660 கோடி மட்டுமே இதுவரை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த உண்மையை கடந்த 03.02.2014 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புக்கொண்டிருக்கிறார். அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ரூ.42,400 கோடி முதலீடு செய்ய 16 நிறுவனங்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

ஆனால், அதன்பின் 18 மாதங்கள் ஆகி விட்ட நிலையில், சூரிய ஒளி மின்திட்டத்திற்காக ரூ.4536 கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்திட்டதைத் தவிர, இதுவரை ஒரு பைசா கூட முதலீடு வரவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் ரூ.25,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால், அன்று நடந்த கூட்டத்தில் எந்த முதலீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் இதே கதை தான் தொடரப்போகிறது. அதிமுக ஆட்சி 6 மாதங்களில் முடிவுக்கு வரப் போகிறது. அதற்கு முன்பாக ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துவிட்டோம் என விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும் தான் இந்த மாநாடு பயன்படுமே தவிர வேறு எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை. ஆனால், தமிழகத்தில் அத்தகைய வசதிகள் இல்லை. சென்னை துறைமுகத்தை இணைப்பதற்கான மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம் அரசியல் காரணங்களுக்காக முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றை இணைக்க உரிய கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ்நாட்டில் தரமான, தடையற்ற, கட்டுபடியாகும் விலையிலான மின்சாரம் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கான திட்டம் கூட தயாரித்து செயல்படுத்தப்படவில்லை. தொழில்தொடங்குவதற்கான அனுமதியும், உரிமமும் வழங்குவதில் வெளிப்படையான அணுகுமுறை இல்லை. தொழில்தொடங்க அனுமதிகோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான கோடி முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர்களுக்கு தமிழகம் குறித்தும், தாங்கள் தொடங்கவிருக்கும் தொழிலின் வளர்ச்சி குறித்தும் நம்பிக்கை தேவை. மாநில முதலமைச்சரை சந்தித்துப் பேசுவதன் மூலம் மட்டும்தான் இந்த நம்பிக்கையை பெறமுடியும். ஆனால், தமிழகத்தில் முதலமைச்சரை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகளே இல்லை.

முதலமைச்சராக இருப்பவர், மற்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று முதலீட்டை திரட்ட வேண்டும். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சவுகான், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பல மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று முதலீடுகளை திரட்டி வருகின்றனர். ஆனால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னைக்கு வந்து சந்திக்க விரும்பும் தொழிலதிபர்களைக்கூட சந்திப்பதில்லை என்பதுதான் சோகம்.

தமிழகத்தில் செயல்பட்டு வந்த நோக்கியா, -ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட தொழிற்சாலைகள் வெளியேறிவிட்டன. இவற்றில் ஃபாக்ஸ்கான் ரூ.30,000 கோடி செலவில் மராட்டியத்தில் தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த பல வாகன உதிரிபாக நிறுவனங்கள் ஆந்திராவில் ஸ்ரீசிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்த பின், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி முதலீடு வெளியேறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வழங்கவேண்டுமானால், தொழில்வளம் பெருக வேண்டும். தமிழகத்தின் தொழில் உற்பத்தியில் 65% சென்னையையொட்டிய பகுதியிலும், 20% கோவை பகுதியிலும் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் தொழில்வளம் பரவவேண்டுமானால், மாநிலம் முழுவதும் உட்கட்டமைப்பு வசதி பெருக வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்வதற்கு அதிமுக அரசு தயாராக இல்லை.

விளம்பரத்திற்காகவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஜெயலலிதா தலைமையில் இம்மாநாடு நடத்தப்படவேண்டும் என்பதற்காகவே, 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. தொழில் வளத்தைப் பெருக்குவதில், அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால், இம்மாநாடு எப்போதோ நடத்தப்பட்டிருக்கும். எந்த பயனும் ஏற்படுத்தாத ஒரு மாநாட்டிற்காக பல நூறு கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நான்கரை ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், எந்த தொழில் திட்டங்களையும் செயல்படுத்தாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி முதலீடு குவிந்து விட்டதாக மாயை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றலாம் என ஜெயலலிதா கருதினால் ஏமாற்றமே பரிசாக கிடைக்கும். இத்தகைய நாடகங்களை நடத்துவோருக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x