Published : 24 Dec 2013 10:30 AM
Last Updated : 24 Dec 2013 10:30 AM

நம்பிக்கை இருந்தால் முடியாதது எதுவும் இல்லை: முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தான் மிக்க மகிழ்ச்சி

அடைவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசுபிரான் அவர்களின் போதனைக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

இயேசுபிரானின் போதனைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் விரும்பியதை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

கிறிஸ்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படும் எனது தலைமையிலான அரசு தமிழகத்தில் வாழும் ஏழைக் கிறிஸ்தவர்கள் ஜெருசேலம் புனிதப் பயணம் சென்று வர ஏதுவாக இந்தியாவிலேயே முதல் முறையாக, நிதி உதவி அளிக்கும் ஒரு சிறப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலம் 891 கிறிஸ்தவ பெருமக்கள் பயனடைந்துள்ளார்கள் என்பதை பெருமையோடு நினைவுகூர விழைகிறேன்.

"நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமா, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்" என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக்

கொண்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x