Last Updated : 08 Jun, 2017 10:41 AM

 

Published : 08 Jun 2017 10:41 AM
Last Updated : 08 Jun 2017 10:41 AM

வண்டல் மண் எடுப்பதில் முன்மாதிரி நீர்நிலையாகத் திகழும் கோவை உக்குளம்

காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான நொய்யல், வெள்ளியங்கிரி மலைகளில் உருவாகி செம்மேடு வழியே தொம்பிலிபாளையம் கூடுதுறையை அடைகிறது.

செம்மேடுக்கு முன் முட்டத்து வயல் கிராமத்தில் உள்ளது உக்குளம். நொய்யலின் 38 குளங்களில் முதலாவதாக விளங்கும் இந்தக் குளம் மூலம், முட்டத்து வயல் முதல் செம்மேடு வரையிலான கிராம மக்கள் பாசன வசதி பெற்றனர்.

இந்த நிலையில், நீண்டகாலமாக தூர் வாரப்படாததால் வண்டல் படிந்து மேடாகிய இந்தக் குளத்தில் புதர்கள் மண்டிக்கிடந்தன. தற்போது இங்குள்ள புதர்கள் அகற்றப்பட்டுள்ளன.

தமிழக அரசின் உத்தரவுக்கு முன்பே இங்கு வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், குளத்தை தூர் வாரும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக செம்மேட்டைச் சேர்ந்த 40 விவசாயிகள் ஒன்றிணைந்து ‘உக்குளம் பாசன மற்றும் கிராம விவசாயிகள் சங்கம்’ என்ற அமைப்பையும் உருவாக்கியுள்ளனர்.

இந்த சங்கத்தின் பொருளாளர் கனகராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது: இதற்கு முன் இந்தக் குளத்தில் மண் எடுத்ததோ, தூர் வாரியதோ கிடையாது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விண்ணப்பித்தபோது, குடிமராமத்து திட்டம் மூலம் நிதி ஒதுக்குவதாகக் கூறினர். அந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும். மேலும், 10 சதவீதம் தொகை விவசாயிகள் பங்களிப்பாக இருக்க வேண்டும். இதையடுத்து, உதவி கோரி சிறுதுளி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அணுகினோம்.

குளத்தில் ஆய்வு மேற்கொண்ட அந்த அமைப்பினர், “குளத்தை தூர் வார சுமார் ரூ.1.80 லட்சம் செலவாகும். இதற்காக நாங்கள் நிதி திரட்டுகிறோம். அதில் விவசாயிகள் பங்களிப்பும் இருக்க வேண்டும்” என்றனர். இதையடுத்து, தூர் வாரும் செலவில் 10 சதவீதத்தை நாங்கள் ஏற்கிறோம் என்றோம். இதற்காக புதிய அமைப்பை உருவாக்கி, விவசாயிகளிடம் நிதி திரட்டினோம்.

இதையடுத்து, ஏரிக் கரையை உயரப்படுத்துவது போன்ற பணிகளை சிறுதுளி அமைப்பு மேற்கொண்டது. குளத்தில் எடுக்கப்படும் வண்டல் மண்ணை வேறு இடத்துக்கு கொண்டுசெல்வதைக் காட்டிலும், விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்.

இது தொடர்பாக பொதுப்பணித் துறையினருக்கு அவர் பரிந்துரைத்தார். பின்னர், விவசாயிகளின் பட்டியல், சிட்டா, பட்டா அடங்கலை அதிகாரிகளிடம் கொடுத்து, பின்னர் வண்டல் மண்ணை எடுத்து, விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினோம். மண் எடுப்பதற்காக பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்தோம். சங்கம் மூலம் வாடகையைச் செலுத்தினோம். கடந்த 3 மாதங்களாக குளத்தில் வண்டல் மண் எடுக்கிறோம்.

கடந்த மாதம்தான் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் விவசாயிகள் வண்டல் எடுக்க அரசு அனுமதி அளித்தது. அதற்கு முன்பே, அதே முறையில் நாங்கள் வண்டல் எடுக்கத் தொடங்கிவிட்டோம். தற்போது குளத்தைத் தூர் வாரிய பிறகு, சுற்றுவட்டாரப் பகுதியில் 60 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கிறது என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x