Published : 25 Aug 2016 05:28 PM
Last Updated : 25 Aug 2016 05:28 PM

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குரல் கொடுக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸ் கடிதம்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இன்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ''தமிழகத்தில் தற்போது இளம் பெண்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு காதலை ஏற்க மறுத்ததால் காரைக்காலில் வினோதினி என்ற பெண் ஆசிட் வீசி கொல்லப்பட்டார். சேலம் வினுப்பிரியா, சென்னை சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என இந்தப் பட்டியல் தொடர்கிறது.

இந்தத் துயரத்துக்கு அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக் காதலும், காதல் என்றால் என்ன என்ற புரியாமையும், ஜாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்புத் திருமணம் தான் என்ற தவறான வழிகாட்டுதலும் தான் காரணம். காதலுக்கோ, கலப்பு திருமணத்துக்கோ ஒருபோதும் நான் எதிரி அல்ல. கடந்த காலங்களில் நான் செய்து வைத்த கலப்புத் திருமணங்கள் என் வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கின்றன.

காதல் என்பது அற்புதமான உணர்வு. எந்த ஒரு பழமும் இயல்பாக கனிந்தால் மட்டுமே சுவைக்கும். கார்பைடு வைத்து கனிய வைத்தால் உடல் நலனுக்கு தீமையை ஏற்படுத்தும். காதலும் அப்படிப்பட்டதுதான். இயல்பாக ஏற்படும் காதல் நாளுக்குநாள் வலிமையடையும். மாறாக பெண்ணின் அழகில் மயங்கியோ, சொத்துக்களைப் பறிக்கும் நோக்குடனோ செயற்கையாக உருவாக்கப்படும் காதல் வாழ்க்கையை பொசுக்கிவிடும்.

காதல் தெய்வீகமானது அல்ல, அது ஆசை மற்றும் செல்வத்தை பொறுத்தே ஏற்படும் என 30-6-1940-ல் குடியரசு இதழில் பெரியார் எழுதியுள்ளார். காதல் மற்றும் கலப்பு திருமணங்களால் ஜாதி ஒழிந்துவிடும் என திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், காதலாலும், கலப்பு திருமணங்களாலும் ஜாதிகள் ஒழிவதில்லை என்பதுதான் உண்மை. காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 99 சதவீதத்தினர் தந்தையின் ஜாதியையே குழந்தையின் ஜாதியாக பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இன்றைய சூழலில் காதல் உள்நோக்கத்துடன் கட்டமைக்கப்படுகின்றன. இவ்வாறு கட்டமைக்கப்படும் காதலால் பெண்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுகிறது. கல்லூரிகளுக்குச் செல்வது படிப்பதற்கு அல்ல, காதலிப்பதற்கு என்ற நச்சு எண்ணத்தை திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் விதைக்கின்றன.

ஜாதி ஒழிப்பு புரட்சி என்ற போர்வையில் பிற ஜாதிப் பெண்களை காதலிக்கும்படி தமது சமுதாய இளைஞர்களை தூண்டி விடுவதை சில தலைவர்கள் முழுநேரத் தொழிலாலக் கொண்டுள்ளனர். அதனை பெண்ணுரிமை பேசும் பெரியார் வழி வந்தவர்களும், பொதுவுடமைவாதிகளும் கண்டிக்காதது வருத்தமளிக்கிறது.

பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும். 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்யும்போது அதற்கு பெற்றோர் ஒப்புதல் வேண்டும். இல்லையெனில் அத்தகைய திருமணங்களை செல்லாதவை என அறிவிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு முக்கிய இடங்களில் காவலர்களை நிறுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்புக்காக 1-1-2013-ல் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டும். பெண்களை பின் தொடர்ந்து தொல்லை தருபவர்களை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இதுபோன்ற கோரிக்கைகளை உங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x