Published : 15 Jan 2014 12:26 PM
Last Updated : 15 Jan 2014 12:26 PM

ரூ.42 கோடியில் பொழுதுபோக்கு மையமாகிறது சேத்துப்பட்டு ஏரி- காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்தவும் ஜெயலலிதா அனுமதி

சென்னை சேத்துப்பட்டு ஏரியை ரூ.42 கோடியில் பொழுதுபோக்கு மையமாக மாற்றவும் அங்கு சாகச விளையாட்டுகள் மற்றும் படகு குழாம் அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காசிமேடு துறை முகத்தை ரூ.75 கோடியில் மேம்ப டுத்த நிர்வாக அனுமதி வழங்கியும் முதல்வர் ஆணையிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை நகரின் மையத்தில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரி, மாநகரம் வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையிலும், தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியாகவே விளங்குகிறது. மீன்வளத் துறைக்குச் சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியை மக்கள் பயன்பெறும் வண்ணம் பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய பசுமைப் பூங்காவாக புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஏரியில் பொழுதுபோக்கு அம்சங்களான தூண்டில் மீன்பிடிப்பு, நீர் சாகச விளை யாட்டுகள், படகு சவாரி, திறந்த வெளி அரங்கங்கள், சிறுவர் விளையாட்டுத் திடல் போன்ற வசதிகள் அமைக்கப்படும். பூங்கா பசுமையுடன் விளங்கும் வகையில் ஏரியின் கரையோரங்களில் அழகிய மற்றும் அரிய வகை மரங்கள் வைக்கப்படும். பசுமைப் பூங்காவில் உருவாக்கப்பட இருக்கும் நடைபாதை மற்றும் தொடர் நடைபாதைகள் மக்களு டைய உடல் நலத்தையும், மன நலத்தையும் பேண உதவியாக இருக்கும்.

அடுக்குமாடி பார்க்கிங்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்தப் பூங்காவில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம் (பார்க் கிங்) ஏற்படுத்தப்படும். இதன்மூலம் பூங்காவுக்கு அதிக அளவில் மக்கள் வாகனங்களில் வருவதற்கு வழிவகை ஏற்படும். இங்கு வரும் மக்களின் பயன்பாட்டுக்காக மீன் உணவகம் ஒன்றும் ஏற்படுத்தப்படும்.

இப்பணிகளை நிறைவேற்று வதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் சேத்துப்பட்டு ஏரி வருங் காலத்தில் ஒரு சிறந்த சுற்றுலா மையமாக வளர்வதற்கு வழிவகை ஏற்படும்.

துறைமுக மேம்பாடு

காசிமேடு மீன்பிடித் துறை முகம் என்றும், ராயபுரம் மீன்பிடித் துறைமுகம் என்றும் அழைக் கப்படும் சென்னை மீன்பிடித் துறைமுகம், 1984-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 575 மீன்பிடி படகுகள்வரை நிறுத்தும் வசதி உள்ளது. தற்போது மீன்பிடி துறைமுகத்துக்கு வரும் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 1,395 ஆக உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல், கையாளப்படும் மீன்களின் அளவும் அதிகரித்துள்ளது.

எனவே, அதிக எண்ணிக்கை யுள்ள மீன்பிடி படகுகள் மற்றும் அதிகப்படியான மீன்வரத்தை கையாளுவதற்கு ஏதுவாக, இந்தத் துறைமுகத்தை ரூ.75 கோடியில் மேம்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின்படி, வடக்கு அலை தடுப்புச் சுவரில் 300 மீட்டர் நீளத்தில் புதிய படகு அணையும் துறை, கண்ணாடி நாரிழை படகுகள் நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் 200 மீட்டர் நீளத்துக்கு புதிய படகுத்துறை, தற்போதுள்ள படகுத்துறையின் வடக்கு முனையில் 140 மீட்டர் நீளத்துக்கு நீட்டிப்பு செய்தல், 150 மீட்டர் நீளத்துக்கு இரண்டு புதிய துணை படகுத் துறைகள், 200 மீட்டர் நீளத்துக்கு இரண்டு புதிய துணை படகுத் துறைகள், இரண்டு புதிய வலை பழுதுபார்க்கும் கூடங்கள் ஏற்படுத்துதல், சுகா தார வளாகம், மின்வசதி, சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் துறைமுகத்தை ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள் ளப்படும். இதன்மூலம் 12,000 மீனவர்கள் நேரடியாகவும், 15,000 மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பயன்பெறுவர்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x