Last Updated : 17 Jan, 2014 07:55 AM

 

Published : 17 Jan 2014 07:55 AM
Last Updated : 17 Jan 2014 07:55 AM

அழகிரியின் மக்கள் சந்திப்பு: நிர்வாகிகள் புறக்கணிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதுமக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டார் மதுரை மக்களவை உறுப்பினர் மு.க.அழகிரி. ஆனால், இதுநாள் வரையில் அவரது தீவிர ஆதரவாளர்களாக இருந்த மாவட்ட, ஒன்றியச் செயலர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக் கணித்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டுமதுரை மக்களவைத் தொகுதியில் போட்டி யிட்டு வென்ற மு.க.அழகிரிக்கு, அதிகமான வாக்கு வித்தியா சத்தைக் கொடுத்த பகுதி மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி.

இதனால், இந்தப் பகுதியில் பல புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்த அழகிரி, அந்த விழாக்களில் பேசும்போதெல்லாம், “இந்தத் தொகுதி மக்களுக்கு நான் என்றென்றும் விசுவாசமாக இருப்பேன்” என்று சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மேலூரில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்குப் பின்புறம், ‘மக்கள் குறைதீர்க்கும் அலுவலகம்’ ஒன்றைத் திறந்து அவர் அதற்கென பணியாளர்களை நியமித்து மனுக்களைப் பெற்று வந்தார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பொதுமக்களை அவர் சந்திக்கவே இல்லை.

இந்தச் சூழலில் வியாழக்கிழமை காலை திடீரென மேலூரில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பொதுமக்களைவிட அவரது ஆதரவாளர்களே அதிக அளவில் திரண்டிருந்தனர். அலுவலகத்தில் தனது இருக்கையில் அழகிரி அமர, வரிசையாக கட்சியினர் அவரைச் சந்தித்தனர்.

நலம் விசாரிப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. முக்கிய நிர்வாகிகளிடம் மட்டும், “ஏப்பா அமைதியா இரு... பொறுமையா இரு... எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான்” என்றார்.

அழகிரியின் வருகை காலை யில்தான் தெரியும் என்பதால், பெண்கள் உள்பட சுமார் 40 பேர் மட்டுமே மனு கொடுத்தனர். வண்ணாம்பாறைபட்டியைச் சேர்ந்த அரசு (40) என்ற மாற்றுத் திறனாளி ஊன்றுகோலுடன் வந்து, அண்ணே எனக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வேணுமண்ணே... என்றார். கண்டிப்பாய் கொடுத்துவிடலாம் என்று சொன்ன அழகிரி, அதில் கையெழுத்திட்டுக் கொடுக்க, “இந்த பிறந்த நாளைக்கே (ஜன. 30) கொடுத்திடுவோம்ணே” என்றார்கள் ஆதரவாளர்கள்.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பி.எம்.மன்னன், எம்.எல்.ராஜ், அசோக்குமார், துரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால், இதுநாள் வரையில் அழகிரி ஆதவாளர்களாக இருந்து சமீபத் தில் மு.க.ஸ்டாலின் பக்கம் சாய்ந்த, புறநகர் மாவட்டச் செயலர் மூர்த்தி, மேலூர் ஒன்றியச் செயலர் வ.ரகுபதி, மேலூர் நகர் செயலர் முகம்மது இப்ராகிம் சேட் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.

1 மணி நேரம் மட்டும் அலுவலகத்தில் இருந்த அழகிரி பின்னர் மதுரை புறப்பட்டார். நிருபர்களின் கேள்விகளுக்கு, “மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்க வந்திருக்கிறேன். வேறொன்றும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x