Published : 07 Jan 2017 12:53 PM
Last Updated : 07 Jan 2017 12:53 PM

ஜெ. இடத்தை சசிகலா நிச்சயம் நிரப்புவார்: நாஞ்சில் சம்பத்

அதிமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்த பிறகு ஏற்பட்டிருப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் இடத்தை சசிகலா நிச்சயம் நிரப்புவார் என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரும் தலைமைக் கழக பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் இன்று (சனிக்கிழமை) காலை சென்னை போயஸ் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்துப் பேசினார்.

பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "பொதுவாழ்வில் இருந்து விடுபடுவது என முடிவு செய்திருப்பதாக கூறியிருந்தேன். ஆனால், எனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு என் மீது அக்கறை கொண்ட பலரும் வலியுறுத்தினார்கள். அவர்கள் வலியுறுத்தலின் பேரில் இன்று சசிகலாவை சந்தித்தேன்.

என்னைப் பார்த்ததும் 'வாங்க.. வாங்க. உங்களைத்தான் எதிர்பார்த்தேன்' என்று வரவேற்றார். காரை ஏன் திருப்பிக் கொடுத்தீர்கள் எனக் கேட்டார். காரை எடுத்துச் செல்லுங்கள் உற்சாகமாக, இயல்பாக சுதந்திரமாக கட்சிப் பணியாற்றுங்கள் என்றார்.

ஜனநாயகக் கட்சியில் என்னைப் போன்றோரின் எதிர்பார்ப்பு இதுவே. அதிமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்த பிறகு ஏற்பட்டிருக்கிறது. அவரை நான் கடுமையாக விமர்சித்திருந்தும்கூட என்னை ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அது ஜனநாயகத்தின் உச்சம்.

அடுத்தகட்டமாக பரவலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன். கட்சிப் பணி ஆற்றுவதற்கு பொறுப்புகள், பதவிகள் அவசியமில்லை. தமிழ் பேசும் நாவலர் என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால், வேறு பதவிகள் பற்றி எனக்கு கவலையில்லை.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றுக் கொண்டுள்ளது எதிரிகளை நிலைகுலையச் செய்துள்ளது. கட்சியினரை சந்தித்து வருகிறார். அவரது தலைமையில் அதிமுக புதுப்பொலிவோடு எழுச்சி காணும். ஜெயலலிதாவின் இடத்தை சசிகலா நிச்சயம் நிரப்புவார். சசிகலா ஆணையின்படி அதிமுகவை உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறச் செய்ய சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்" என்றார்.

நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தபோது, அவருக்கு பதவி அளிக்கப்பட்டதுடன், கட்சி சார்பில் ‘டிஎன் 06 ஹெச் 9007’ என்ற எண் கொண்ட இன்னோவா கார் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த காரை, அண்மையில் அதிமுக அலுவலக வளாகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்.

இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், அவர் அதிமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்த பிறகு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x