Published : 13 Oct 2014 15:39 pm

Updated : 13 Oct 2014 15:39 pm

 

Published : 13 Oct 2014 03:39 PM
Last Updated : 13 Oct 2014 03:39 PM

தமிழ்ச் சமுதாயத்துக்கு தொண்டாற்றுகிறது ‘தி இந்து’ தமிழ்: தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் ம.திருமலை பேச்சு

தமிழ்ச் சமுதாயத்துக்கு தொண்டு செய்யும் பணியைச் செய்து வருகிறது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தின் மாநகரங்களில் நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சியைத் தொடர்ந்து தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் மேலும் அவர் பேசியதாவது:

தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (நாளை) நடைபெறவுள்ள நிலையில் பரபரப்பான பணிகளுக்கிடையே இங்கு வர வேண்டும் என்ற மகிழ்வோடு வந்துள்ளேன். இன்று தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் தொடர்பாக சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்த சூழலிலும் அதை தவிர்த்துவிட்டு தமிழ்ச் சமுதாயத்துக்கு தொண்டு செய்துவரும் ‘தி இந்து’ விழாவில் பங்கேற்க முன்னுரிமை அளித்து வந்துள்ளேன்.

தமிழில் இந்து பத்திரிகை வருகிறது என்று அறிந்தவுடன் நான் மகிழ்ச்சியில் துள்ளினேன். இந்த மகிழ்வை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் வகையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது.

உலகத்தை மட்டுமல்ல பிரபஞ்சத்தையே நம் கண் முன்னே நமது மொழியிலேயே கொண்டு வந்து நிறுத்துகிறது ‘தி இந்து’ என்றால் அது மிகையல்ல. தினந்தோறும் 7 பத்திரிகைகளை படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. “தி இந்து” தமிழ் வந்தவுடன் முதலில் அதைத்தான் படிக்கிறேன். அதன் பிறகுதான் மற்றவை.

பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லும்போது அதில் 3 முக்கிய விஷயங்கள் இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும் என்று சொல்வார்கள்.

அதில் முதலாவது, அது செய்திகளைத் தெரிவிக்க வேண்டும். உலகில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை உடனடியாக அறிந்துகொள்ளும் வசதி, வாய்ப்புகள் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், இன்று அப்படியல்ல. இதில் சிறப்பாகவும், செய்திகளில் கூடுதல், குறைவு இன்றியும், அனுமானம் இல்லாமலும், சார்பு இல்லாமலும் ‘தி இந்து’வில் வெளிவரும் செய்திகளை நாம் முழுமையாக நம்பலாம்.

இரண்டாவதாக அறிவூட்டல் என்ற விஷயம் பத்திரிகைகளுக்கு இருக்க வேண்டும். இன்று வெளிவரும் பத்திரிகைகள் அறிவூட்டக்கூடிய விஷயங்கள், தரவுகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ‘தி இந்து’வுக்கு 80 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அவ்வளவு தரவுகளை, அறிவூட்டக் கூடிய விஷயங்களை ‘தி இந்து’ அளிக்கிறது.

தமிழக மக்களிடம் நிலவும் மாயைகளை, மூடநம்பிக்கையை, அவநம்பிக்கையை, சமூக கூச்சல்களை அகற்றக்கூடிய பணிகளை ‘தி இந்து’வில் வரும் கட்டுரைகள் செய்து கொண்டிருக்கின்றன.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறுகிறேன். முடிவை நீங்களே எடுங்கள் - உங்கள் மீது திணிக்கப்படும் எந்த முடிவையும் அதை திணிப்பது ஆசிரியராக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் முழு பலத்தோடு அதை எதிர்க்கவேண்டும் என கட்டுரையாளர் கார்த்திகேயன் எழுதியிருந்தார். இதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் நான் சொன்ன யோசனைகளைக் கேட்காமல் என்னை முழு பலத்துடன் எனது மகன் எதிர்த்தான். இதை நான் எனக்கு கிடைத்த தோல்வியாக எண்ணினேன். ஆனால், ‘தி இந்து’வின் இந்த கட்டுரையைப் படித்த பின்னர், நான் உன்னை புரிந்துகொண்டேன் என மகனுக்கு தெரிவித்ததுடன், அந்த கட்டுரையை நீயும் படி என்று மகனிடம் சொன்னேன்.

உலகம் நமக்கு புரியாத புதிராகவே மாறி வருகிறது. அது நமக்கு அளிக்கும் வாழ்வை சுரண்டி இயற்கைக்கு மாறாக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறோம். இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் எழுத்து நடை எழுத்தாளர் அசோகமித்திரனின் எழுத்துகளைப் போன்று உள்ளது. அவரது எழுத்துகளைப் படிக்கும் எவரும் அவர் எந்தப் பக்கம் நின்று எழுதுகிறார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. எழுத்தாளன் எந்தப்பக்கம் நின்று எழுதலாம் என்பது தெரியாமல் எழுதுவது ஒரு கலை, அதை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்து வருகிறது. தகவல் கொடுப்பவர்கள் எந்த சார்பும் இல்லாமல் கொடுத்தாலே அது அனைவராலும் மதிக்கப்படும்.

இது படித்துவிட்டு தூக்கி எறியும் பத்திரிகை இல்லை. கத்தரித்து, வெட்டி எடுத்து பத்திரப்படுத்த வேண்டிய பாதுகாக்க வேண்டிய விஷயங்கள் கொண்ட பத்திரிகை. பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்கும் கருத்துகளை கொண்டுசேர்க்கும் விதமாக தன்னம்பிக்கை, கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ‘தி இந்து’வில் வெளிவந்துள்ள கட்டுரைகளை தனித்தனி புத்தகங்களாக வெளியிட வேண்டும்.

ஒரு பத்திரிகை சமுதாயத்தில் ஆளுமையை உருவாக்குகிறது என்றால் அது சிறப்பானது. அதை ‘தி இந்து’ தமிழ் செய்து வருகிறது. நமது சந்ததியினருக்கு வரலாற்றுத் தகவல்களைக் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பும், கடமையையும் நமக்கு உள்ளது. அந்த வகையில் வரலாற்று தொன்மைகளை தாங்கிவரும் நாளிதழாக ‘தி இந்து’ தமிழ் உள்ளது. இளைஞர்கள் அதிக அளவில் ‘தி இந்து’ தமிழை படிக்க வேண்டும். இவ்வாறு திருமலை கூறினார்.

முதல் வாசகர்களுக்கு கவுரவம்

விழாவுக்கு முதலில் வந்த திருவைக்காவூர் கீதா முருகானந்தம், தஞ்சாவூர் அ.பாண்டியராஜ், தர்மா அரசு ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவை, இந்து குழுமத்தின் முதுநிலை பொது மேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். நிறைவாக, இந்து திருச்சி மண்டல பொது மேலாளர் கே.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

முன்னதாக நடுப்பக்க ஆசிரியர் சமஸ் ஏற்புரையாற்றினார்.

லலிதா ஜூவல்லரி, ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் மற்றும் தஞ்சாவூர் சங்கம் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் விழாவை இணைந்து நடத்தின. விழா அரங்கில் 'தி இந்து' குழுமத்தின் சிறப்பு வெளியீடுகளான திருப்பதி பிரம்மோற்சவம் மலர் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

வாசகர் சிந்தனைக்கு தீனி போடும் ‘தி இந்து’

முன்னதாக வரவேற்புரையாற்றிய ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் பேசியபோது, “மற்ற நாளிதழ்களிலிருந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற ஆசிரியர் குழுவின் முடிவை நிர்வாகம் எந்த தலையீடும் இல்லாமல் செயல்பட முழு அதிகாரத்தை எங்களுக்கு அளித்துள்ளது. எனவேதான் தொடங்கிய நாள் முதல் இன்று வரையில் சிறப்பான செய்திகளை தர முடிகிறது.

அதேபோன்று வாசகர்களின் சிந்தனைப் பசிக்குத் தீனிபோடும் வகையில் நடுப்பக்க கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் மற்றும் இதர உலகச் செய்திகள், உள்ளூர் செய்திகள் என அனைத்தையும் மாறுபட்ட கோணத்தில் வழங்கி வருகிறோம்.

‘தி இந்து’ தமிழ் வாசகர்களின் நாளிதழாகவே வெளிவருகிறது என்பதை பெருமையுடன் சொல்ல முடியும். இந்த நாளிதழை வாசகர்கள்தான் நடத்துகிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. வாசகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யும் வகையில் ‘உங்கள் குரல்’ இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பதிப்புக்கும் ஒவ்வொரு தொலைபேசி எண் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தினந்தோறும் 800 முதல் 1,000 வாசகர்கள் பயன்படுத்தி பல்வேறு கருத்துகளை எங்களுக்கு தெரிவிக்கின்றனர். இதில் தஞ்சாவூர் மாவட்ட வாசகர்களின் பங்களிப்பு சிறப்பானது.

தொடர்ந்து வாசகர்களின் எண்ண ஓட்டங்களுக்கு மதிப்பளித்து அதன்படி நாளிதழை செழுமைப்படுத்தவே இதுபோன்ற வாசகர் திருவிழாக்களை நடத்தி வருகிறோம்” என்றார்.

தி இந்துவாசகர் திருவிழாஓராண்டு கொண்டாட்டம்முதல் வாசகர்

You May Like

More From This Category

More From this Author