Last Updated : 11 Jul, 2016 12:39 PM

 

Published : 11 Jul 2016 12:39 PM
Last Updated : 11 Jul 2016 12:39 PM

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதில் குளறுபடி?

மண்டல, மாவட்ட மேலாளர்களிடம் விசாரிக்க முடிவு

மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு விருப்பப்படி மாற்றுப்பணி வழங்க லஞ்சம் கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மண்டல, மாவட்ட மேலாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்கட்டமாக 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுக்கடைகள் திறக்கும் நேரமும் காலை 10 மணிக்கு பதிலாக 12 மணியாக மாற்றப்பட்டது.

மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் மாற்றுப்பணி வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, காலிப்பணியிடங்கள் உள்ள மதுக்கடைகள், குடோன்கள், மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்கள், பறக்கும் படை ஆகியவற்றில் மாற்றுப்பணி வழங்கப்படும் என கூறப்பட்டது. இது தொடர்பான ஆணை கடந்த மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், இந்த ஆணையை மீறி முறைகேடான வகையில் பணியிட மாற்ற பட்டியலை தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 'தி இந்து'விடம் கூறியதாவது:

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 500 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய கண்காணிப்பாளர், விற்பனையாளர், துணை விற்பனையாளர், உதவியாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். அதில் நானும் ஒருவன். திருவள்ளூர் மாவட்டத்தில் 19 கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அங்கே பணிபுரிந்தவர்களுக்கு மூப்பின் அடிப்படையில் மாற்றுப் பணி வழங்கவில்லை. என்னைவிட ஜூனியர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் பறக்கும் படை மற்றும் டாஸ்மாக் மாவட்ட அலுவலகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது.

பணிமாற்றம் தொடர்பாக டாஸ்மாக நிறுவனம் பிறப்பித்த ஆணையை பின்பற்றாமல், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு மாவட்ட மேலாளர் தன் விருப்பப்படி பணிமாறுதல் வழங்கியுள்ளார். லஞ்சம் வாங்குவோர் மீது அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூப்பு அடிப்படையில் பணி

இதுபற்றி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.பெரியசாமியிடம் கேட்டபோது, "பணி மாற்றத்தில் முறைகேடுகள் நடப்பதாக எங்களுக்கும் தகவல்கள் வருகின்றன. விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை என பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக இந்தக் குற்றச்சாட்டுகள் உள்ளன. மூப்பின் அடிப்படையில் டாஸ்மாக் அல்லாத மாற்று இடத்தில் பணி வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.

டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டபோது, "பணியிட மாற்றத்தை மூப்பின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களை அறிவுறுத்தியுள்ளோம். இதை மீறி முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை சிலர் புகார் அளித்துள்ளனர். சென்னையில் வரும் 13-ம் தேதி நடக்கவுள்ள மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களின் கூட்டத்தில் இதுபற்றி விசாரிக்க உள்ளோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x