Published : 13 Apr 2017 12:58 PM
Last Updated : 13 Apr 2017 12:58 PM

தமிழக விவசாயிகள் போராட்டத்தை பாஜக அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை: திருநாவுக்கரசர்

டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில் "கடந்த 140 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினாலும் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மறுக்கப்பட்ட காரணத்தினாலும், கடும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியிலிருந்து மீள்வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டும் மறுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் கடும் கடன் சுமையில் விவசாயிகள் உழன்று வருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டுமென தலைநகர் டெல்லியில் கடந்த 30 நாட்களாக தமிழக விவசாயிகள் இரவு - பகல் பாராமல் ஜந்தர்மந்தர் சாலையிலேயே படுத்து, உறங்கி பல்வேறு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இப்போராட்டத்தை ஒரு பொருட்டாகவே மத்திய பா.ஜ.க. அரசு கருத தயாராக இல்லை.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் எழுத்து மூலம் பதிலளித்ததில், ‘விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யும் எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என்று கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறார். ஆனால் கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பிப்ரவரி 2008 இல் நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரூபாய் 71 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து ஆணையிட்டது. இதனால் 4 கோடியே 30 லடசம் விவசாயிகள் கடன் சுமையிலிருந்து மீளுகிற நிலை ஏற்பட்டது. இத்தகையஅணுகுமுறையை கையாள பா.ஜ.க. அரசு தயங்குவது ஏன் ? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக கூட்டுவோம் என தேர்தலில் வாக்குறுதி அளித்த நரேந்திர மோடி ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடுகிற வகையில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிற விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள கடனை தள்ளுபடி செய்ய மாட்டோம் என்று கடுமையாக கூறுகிற மத்திய பா.ஜ.க. அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குவதில் இத்தகைய அணுகுமுறையை பின்பற்றாதது ஏன் ? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய நேரடி, மறைமுக வரிகள் வாயிலாக 2014-15 இல் ரூபாய் 5 லட்சத்து 54 ஆயிரத்து 349 கோடியும், 2015-16 இல் 6 லட்சத்து 11 ஆயிரத்து 128 கோடியும் மத்திய பா.ஜ.க. அரசு வரிச் சலுகை வழங்கியுள்ளது. அதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு வருமான வரிச் சலுகையாக ரூபாய் 2 லட்சத்து 47 ஆயிரத்து 232 கோடி வரிச் சலுகை வழங்கியுள்ளது. இவ்வளவு வரிச் சலுகைகளை பெருமுதலாளிகளுக்கு தாராள மனத்தோடு வாரி, வாரி வழங்குகிற நரேந்திர மோடி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற வகையில் கடன் தள்ளுபடி கோரிக்கையை மறுப்பதை எவருமே ஏற்றுக் கொள்ள முடியாது. இதைவிட விவசாய விரோத அணுகுமுறை வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசை தட்டிக் கேட்பதற்கு அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. மேலும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கிற துணிவில்லாத நிலையில் தமிழக விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். மத்திய - மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை செவிமடுக்கக் கூட தயாராக இல்லாத அவலநிலையில் உள்ள தமிழக விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்து வகையில் மிகப்பெரிய போராட்டத்தை தமிழக காங்கிரஸ் கட்சியே விரைவில் முன்னின்று நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"

என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x