Published : 24 Feb 2017 10:56 AM
Last Updated : 24 Feb 2017 10:56 AM

30,000 மீனவர்களுக்கு தலா ரூ.5,000: எண்ணெய் கசிவு பாதிப்புக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரண உதவி

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த எண்ணெய் கசிவினால் பாதிப்புக்குள்ளான 30,000 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் இடைக்கால நிவாரணமாக வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ரூ.75 லட்சம் செலவில் இரண்டு மீன் சந்தைகள் - எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் அமைக்கப்படும் என்றும அவர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட கடற்கரைகளில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இடைக்கால நிவாரண உதவித் தொகை 15 கோடி ரூபாய் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு பழனிசாமி அவர்கள் உத்தரவு

இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கடந்த 28.1.2017 அன்று எண்ணூர் காமராஜர் துறைமுக கடற்பகுதியில் எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள் மற்றும் டான் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்கள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதால், கப்பலிலிருந்த எண்ணெய் கசிந்து திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் பரவியது.

இவ்வாறு கரை ஒதுங்கிய எண்ணெய் படலத்தை உடனடியாக அகற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மீன்வளத் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள், இந்திய கடலோர காவற்படை ஆகியவற்றைச் சார்ந்த பணியாளர்களுடன் மீனவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆக மொத்தம் 5,700 நபர்கள் போர்க்கால அடிப்படையில் இந்தப் பணியில் 25 நாட்களுக்குமேல் ஈடுபட்டு கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றினர்.

மேற்படி எண்ணெய் கசிவின் காரணமாக இம்மூன்று மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் 28.01.2017 முதல் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல இயலாததாலும், மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை பொதுமக்கள் வாங்க தயங்கியதாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மீன் மாதிரிகளை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் உடனுக்குடன் ஆய்வு செய்து மீன்கள் பொதுமக்கள் நுகர்வதற்கு தகுதியானதென சான்று அளித்தது. இந்த விவரங்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. மீனவர்களுக்கு ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்புகளை கள ஆய்வு செய்து உரிய நிவாரணத்தை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசின் மூலமாக பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏற்கெனவே, தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, கப்பல் நிறுவனங்களின் காப்பீட்டு நிறுவனத்தின் கேட்புப் படிவங்கள் மீனவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீளப் பெறும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இத்தகைய படிவங்களை பூர்த்தி செய்து காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு மூலம் நிவாரணம் பெறவேண்டியுள்ளது. பொதுவாக உலகளவில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறும்போது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து உரிய நிவாரணம் பெறுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படுகிறது.

மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாதென்ற நோக்கில் 23.2.2017 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இம்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த எண்ணெய் கசிவினால் பாதிப்பிற்குள்ளான 30,000 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் இடைக்கால நிவாரணமாக வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இடைக்கால நிவாரணத்திற்கான மொத்த செலவினமான 15 கோடி ரூபாயை முழுவதுமாக தமிழ்நாடு அரசு ஏற்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். மேலும், ரூ.75 லட்சம் செலவில் இரண்டு மீன் சந்தைகள் – எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு மூலம் தற்சமயம் செலவு மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x