Last Updated : 13 Jan, 2014 12:00 AM

 

Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM

சம்பா அறுவடைப் பணிகள் விறுவிறுப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா பயிர் அறுவடைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஆக. 2-ல் மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அதனைப் பயன்படுத்தி மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 530 ஹெக்டேர் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டன. சி.ஆர்.1009, ஏடிடி 46, பிபிடி ஆகிய நெல் ரகங்களை பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இவை அனைத்தும் மத்திய கால பயிர்கள் என்பதால் அவை வளர்ந்து கதிர்வந்து, பால்பிடித்து, முற்றி தற்போது அறுவடைக்கு வந்திருக்கிறது.

கடந்த வாரமே அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கினர். எனினும், வங்கக் கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் மழை வரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்ததால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆனால், சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் மழை இல்லை. எனவே அங்கு விவசாயிகள் சுறுசுறுப்பாக அறுவடை செய்தனர். தற்போது நல்ல காலநிலை நிலவுதால் மாவட்டம் முழுவதும் சம்பா நெல் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன.

நெல் கொள்முதல் நிலையங்கள்

அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலையங்களிலும், தனியார் வியாபாரிகளிடமும் விற்கப்படுகின்றன. விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் 190 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் 40 கிலோ கொண்ட மூட்டை முதல் ரக நெல் ரூ.566 விற்கப்படுகிறது. அதில் 20 சதவீத ஈரப்பதத்துக்கும் மேல் இருந்தால் பிடித்தம் செய்யப்படும். ஆனால், ஈரப்பதம் இருந்தாலும் இல்லையென்றாலும் கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தர் ஒரு சிப்பத்துக்கு ரூ.25 வரை லஞ்சமாக எடுத்துக் கொள்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தனியாரிடம் அதிக விலை கிடைக்கிறது

பிபிடி ரகத்துக்கு கொள்முதல் நிலையங்களைவிட தனியாரிடம் அதிக விலை கிடைக்கிறது. 60 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு தற்போது ரூ.950 வரை தனியார் வியாபாரிகள் அளிக்கின்றனர். இது அரசு கொள்முதல் நிலைய விலையை விட ரூ.100 அதிகம். இந்த விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக மழை, வெள்ளம், புயல், வறட்சி என்று தொடர்ந்து இயற்கை தாக்குதல்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு இந்த ஆண்டு வெள்ளாமை கைக்கு கிடைக்கும் நிலைமை ஏற்பட்டிருப்பதால் அவர்களிடம் உண்மையான மகிழ்ச்சி நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x