Published : 04 Feb 2017 08:22 AM
Last Updated : 04 Feb 2017 08:22 AM

எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் விபத்துக்குள்ளான கப்பல்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் விபத்துக்குள்ளான 2 கப்பல்களையும் சிறை பிடிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை முடித்து வைத்துள்ள உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தேசிய மீனவர்கள் நலச்சங்கத்தின் தலைவரான எம்.இ.ராஜா உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஜன.28-ம் தேதி 2 கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தால் கச்சா எண்ணெய் கடலில் கலந்து கடல் வளம் பெரும் இழப்புக்கு உள்ளாகியுள்ளது. கடல் நீர், கழிவு நீராக மாறிவிட்டது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

கடல் வளத்தையும், சுற்றுச் சூழலையும் மாசுபடுத்திய 2 கப்பல்களையும் சிறைபிடித்து அந்த கப்பல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கப்பல் நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு கோர வேண்டும். அபராதமும் விதிக்க வேண்டும்.

கச்சா எண்ணெயின் பாதிப்பு பழவேற்காடு முதல் விசாகப்பட்டினம் வரை நீளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அரசு அதிகாரிகள் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் இது போன்ற அவசர காலகட்டங்களில் கடலில் கலக்கும் கழிவுகளை அகற்ற தேவையான திட்டங்களை வகுத்து, நவீன உபகரணங்களையும் கையிருப்பு வைக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இந்த விஷயத்தில் அரசு நிர்வாகம் சரியான நடவடிக்கையைத்தான் எடுத்து வருகிறது’’ என்றனர்.

இதையடுத்து நீதிபதிகள், விபத்துக்குள்ளான ஈரான் கப்பல் தப்பிச்சென்றால் இழப்பீடு கோர முடியாது என்றும், அபராதம் விதிக்க முடியாது என்றும் மனுதாரர் அச்சப்படுகிறார். கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கழிவை சுத்தப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இது தொடர்பாக ஏற்கெனவே பசுமை தீர்ப்பாயம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தில் தமிழக அரசு துரிதமாக செயல்பட வேண்டும். மாநில அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கப்பல்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x