Published : 24 Apr 2017 08:53 AM
Last Updated : 24 Apr 2017 08:53 AM

அரிய வகை தாவரங்கள், விலங்குகளை பாதுகாக்க ஒன்றிய அளவில் பல்லுயிர் பரவல் மேலாண்மை குழு அமைப்பு: வனத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் உள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்களைப் பாதுகாக்க ஒன்றிய அளவில் பல்லுயிர் பரவல் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரியத்தின் 5-வது கூட்டம், வாரியத் தின் தலைவரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:

நமது நாட்டின் அரிய வகை விலங்குகள் மற்றும் தாவர இனங் கள் ஊரக மக்களின் அறியாமை யால், அயல் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிற நாடுகள் காப்புரிமை கோருகின்றனர். இதைத் தடுக்கும் விதமாக, அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் பல்லுயிர் பரவல் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர துறையினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த குழுக்கள் மூலம் மருத்துவ குணமுடைய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைச் சேர்ந்த அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதன் மூலம் அரிய வகை பல்லுயிர் பரவல் உயிரினங்கள் அழிந்துவிடாமல் நமது வருங்கால சந்ததியினருக்கு கொண்டுபோய் சேர்க்க முடியும் என்றார்.

கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் முகமது நசிமுதின், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தேசிய பல்லுயிர் பரவல் ஆணையத் தலைவர் மீனாகுமாரி, வனத்துறை தலைவர் எச்.பசவ ராஜ், தமிழ்நாடு பல்லுயிர் பரவல் வாரிய உறுப்பினர் செயலர் சுப்ரத் மொகபத்ரா கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x